Published : 03 Jan 2023 12:49 PM
Last Updated : 03 Jan 2023 12:49 PM

அறிவியலைக் கொண்டு இந்தியாவை தற்சார்பு நாடாக்க வேண்டும்: பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: அறிவியலைக் கொண்டு இந்தியாவை தற்சார்பு நாடாக ஆக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாக்பூரில் நடைபெறும் 108வது இந்திய அறிவியல் மாநாட்டை புதுடெல்லியில் இருந்தவாறு காணொளி காட்சி வாயிலாக தொடங்கிவைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், "அறிவியலைக் கொண்டு இந்தியாவை தற்சார்பு நாடாக ஆக்க வேண்டும். அறிவியலின் முயற்சிகள் ஆய்வகங்களில் இருந்து நிலத்திற்குச் செல்ல வேண்டும். அப்போதுதான் அது பலன் தரும். சிறுதானியங்களின் ஆண்டாக 2023ஐ ஐ.நா. அறிவித்துள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் சிறுதானியங்களையும் அவற்றின் பயன்பாட்டையும் அறிவியலின் துணை கொண்டு மேம்படுத்த வேண்டும்.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிகமாக தொடங்கப்படும் நாடுகளின் பட்டியலில் தற்போது முதல் மூன்று இடத்திற்குள் இந்தியா இருக்கிறது. கண்டுபிடிப்புகள் தொடர்பான பட்டியலில் 2015 வரை இந்தியா 81வது இடத்தில் இருந்தது. தற்போது அதனை 40வது இடத்திற்குக் கொண்டு வந்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

இந்திய அறிவியல் மாநாடு இன்று முதல் வரும் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. மகாராஷ்ட்ராவின் நாக்பூரில் உள்ள ஆர்.டி.எம். பல்கலைக்கழகத்தில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் பெண் முன்னேற்றத்துடன் கூடிய நீடித்த நிலையான வளர்ச்சியை அடைவது இந்த ஆண்டுக்கான மாநாட்டு கருப்பொருளாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு பல்வேறு அமர்வுகள் நடைபெற உள்ளன. இதில், நிபுணர்கள் பங்கேற்று பேச இருக்கிறார்கள். அதோடு, விவாத நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் இந்திய அறிவியல் மாநாடு 1914ம் ஆண்டு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x