Published : 03 Jan 2023 11:46 AM
Last Updated : 03 Jan 2023 11:46 AM

உத்தரப் பிரதேசத்திற்குள் நுழைகிறது இந்திய ஒற்றுமை யாத்திரை: ராகுலுடன் பிரியங்காவும் பங்கேற்கிறார்

புதுடெல்லி: ஒன்பது நாட்கள் குளிர்கால விடுமுறைக்கு பின்னர் டெல்லியிலிருந்து மீண்டும் தொடங்கி இருக்கும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை இன்று (ஜன.3) உத்தரப் பிரதேசத்திற்குள் நுழைகிறது. பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள யாத்திரை மிகுந்த கவனம் பெற்றுள்ளது.

காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த செப். 7 ம் தேதி தமிழகத்தில் தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களைக் கடந்த 24-ம் தேதி டெல்லிக்குள் நுழைந்து அன்று மாலை செங்கோட்டையில் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து 9 நாட்கள் குளிர்கால விடுப்பு காரணமாக யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் டெல்லியில் இருந்து யாத்திரை தொடங்கியது.

டெல்லியில் உள்ள காஷ்மீரி கேட்டிலிருந்து தொடங்கிய யாத்திரை தொடர்ந்து காசியாபாத் மாவட்டத்தில் உள்ள லோனி நகரை நோக்கி பயணிக்கிறது. டெல்லி யமுனா பஜாரில் உள்ள ஹனுமன் கோயிலில் இன்று காலை ராகுல் காந்தி கதா சடங்கு நிகழ்த்தினார். பின்னர் அவருடன் புகைப்படம் எடுக்க விரும்பிய கோயில் குருக்களுடன் சிறிது நேரம் செலவிட்டார். டெல்லியில் இருந்து தொடங்கும் யாத்திரை லோனி நகரம் சென்று காசியாபாத் வழியாக பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்திற்குள் இன்று (செவ்வாய்கிழமை) மதியம் நுழைகிறது.

பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆளும் மாநிலத்தில் நுழையும் யாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி ராகுலுடன் யாத்திரையில் இணைந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து இருவரும் கைரானா, ஷாமிலியின் பல பகுதிகளைத் தொட்டு பாக்பத் வழியாக நடைபயணம் மேற்கொள்கின்றனர். புதன்கிழமை மாவிகலாவை கிராமத்தை அடையும் யாத்திரையில், கடந்த 2020, 2021ம் ஆண்டு விவசாயிகள் போராட்டதில் தீவிரமாக இருந்த பாரதிய கிஷான் சங்கம் யாத்திரையை எதிர்கொண்டு வரவேற்கிறது.

முன்னதாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், மேற்குவங்க மாநில முதல்வர் மாயாவதியும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொள்ளவேண்டும் என்று காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. அதற்கு இருவரும் யாத்திரை வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருந்ததுடன், யாத்திரைக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாக தெரிவித்திருந்தனர்.

திங்கள்கிழமை யாத்திரையில் கலந்து கொள்வதற்காக தனக்கு அழைப்பு விடுத்ததற்காக ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்து, யாத்திரை வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து ராகுலுக்கு அவர் எழுதிய கடிதத்தில், "இந்தியா என்பது புவியியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஓர் உணர்வு. அன்பு, அகிம்சை, உணர்வுகள், ஒத்துழைப்பு, நல்லிணக்கம் போன்ற நேர்மறை கூறுகள் இந்தியாவை இணைக்கின்றன. இதனை உள்ளடக்கிய கலாச்சாரத்தை இணைக்கும் இந்த யாத்திரை அதன் நோக்கத்தை அடையும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

"இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு என் வாழ்த்துக்களையும், யாத்திரையில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுத்ததற்கு ராகுல்ஜிக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மாயாவதி ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக, செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, "பொதுவாகவே அன்புக்கும் வெறுப்புக்கும் நிறைய இடைவெளியும், வேறுபாடும் இருக்கிறது. ஆனாலும் பலர் அன்பை பரப்பவே நினைக்கின்றனர். அகிலேஷும், மாயாவதியும் வெறுப்பை விரும்ப மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்" என்று தெரிவித்திருந்தார்.

150 நாட்கள் திட்டமிடப்பட்ட இந்திய ஒற்றுமை யாத்திரை 110 நாட்களில் சுமார் 3,000 கிமீ கடந்துள்ளது. ஜனவரி 5ம் தேதி ஹரியாணாவிற்குள் நுழைந்து பஞ்சாப் வழியாக பயணித்து வரும் 26 ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் நிறைவடைகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x