Published : 01 Jan 2023 07:06 PM
Last Updated : 01 Jan 2023 07:06 PM
புதுடெல்லி: கடந்த ஜூன் 18-ம் தேதி பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் தனது 100-வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது காந்தி நகருக்கு சென்ற பிரதமர் மோடி, தாய்க்கு பாத பூஜை செய்து வணங்கினார். அதோடு தாயின் வாழ்க்கை குறித்த நினை வலைகளை வலைப்பதிவில் வெளியிட்டார். அதன் சாரம்சம் வருமாறு:
‘அம்மா’ என்பது சாதாரண வார்த்தை அல்ல. அன்பு, பொறுமை,நம்பிக்கை என அந்த வார்த்தைக்கு ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. ஒரு தாய் குழந்தையை பெற்றெடுப்பதோடு மட்டுமல்லாமல், அந்த குழந்தையின் குணநலன்கள், தன்னம்பிக்கையை செதுக்கி வளர்க்கிறார். பிள்ளைகளுக்காக அனைத்தையும் தியாகம் செய்கிறார்.
எல்லா தாய்மார்களையும்போல எனது தாயும் மிகவும் எளிமையானவர், அற்புதமானவர். குஜராத்தின் வட்நகரில் மண் சுவர், ஓடு வேய்ந்த ஒற்றை அறை கொண்ட சிறிய வீட்டில் நாங்கள் வசித்தோம். அந்த வீட்டில் கழிப்பறை, குளியல் அறை கிடையாது.
வீட்டை ஒட்டி மூங்கிலால் ஒரு பரணை எனது தந்தை அமைத்தார். அதுதான் எங்களது சமையல் அறை. அந்த பரணில் ஏறி எனது தாய் சமையல் செய்வார்.ஒருபோதும் அவர் உணவு வகைகளை வீணாக்க மாட்டார்.
எனது தந்தை வட்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்பனை செய்தார். நாள்தோறும் அதிகாலை4 மணிக்கு அவர் பணிக்குச் செல்வார். அப்போதே எனது தாயும்எழுந்துவிடுவார். வீட்டு வேலைகள் அனைத்தையும் அவர் ஒருவரே செய்வார். வீட்டுச் செலவுகளை சமாளிக்க அண்டை வீடுகளில் பாத்திரங்களை கழுவினார். அதோடு ராட்டையில் நூல் நூற்றார்.
மழைக்காலத்தில் எங்கள் வீட்டின் கூரை ஒழுகும். அப்போதுஎனது தாய் வாளிகள், பாத்திரங்களில் மழைநீரை சேகரிப்பார். அந்த தண்ணீரை அடுத்த சில நாட்கள் வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்வார். அப்போதே அவர்மழைநீரை சேகரித்தார். எனது தாய் எப்போதுமே தூய்மைக்குமுன்னுரிமை அளிப்பார். பசு சாணத்தால் வீட்டை மெழுகி சுத்தமாக வைத்திருப்பார். மண் சுவரில் கண்ணாடி துண்டுகளை பதித்தும் ஓவியங்களை வரைந்தும் வீட்டை அழகுபடுத்துவார்.
எனது தாய் பெயரில் சொத்துகள் எதுவும் இல்லை. அவர் தங்க நகைகளை அணியவில்லை, நான்வீட்டை விட்டு வெளியேற முடிவுசெய்தபோது, “உன் மனம் சொன்னபடி செய்” என்று ஆசிர்வதித்தார். கடந்த 2001-ம் ஆண்டு குஜராத் முதல்வராக பதவியேற்பதற்கு முன்பாக தாயை சந்தித்து ஆசி பெற சென்றேன்.
அப்போது அவர், ‘‘உன்னுடைய அரசு பணி என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் நீ ஒரு போதும் லஞ்சம்வாங்காதே’’ என்று அறிவுறுத்தினார். அதன் பிறகு தொலைபேசியில் பேசும்போதெல்லாம், ‘‘எந்தத்தவறும் செய்யாதே, ஏழைகளுக் காக உழைத்துக் கொண்டே இரு” என்று அன்பு கட்டளையிட்டார். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தனது நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT