Published : 01 Jan 2023 05:32 AM
Last Updated : 01 Jan 2023 05:32 AM
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் முதன்முதலில் ஒரு நாள் உண்டியல் வருவாய் ஒரு லட்சத்தை கடந்தது. இது தற்போது பன்மடங்கு உயர்ந்து தினமும் சராசரியாக ரூ. 3.5 கோடி உண்டியல் வருவாய் கிடைக்கிறது.
இதனால், இந்த 2022-ம்ஆண்டு ஏழுமலையான் கோயில்உண்டியலில் பக்தர்கள் ரூ.1,320கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இதில் தொடர்ந்து கடந்த 10 மாதமாக பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 100 கோடிக்கும் மேல் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
டிசம்பர் மாதத்தில் மட்டும் 5 முறை ரூ. 5 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. அதன்படி நேற்று 30-ம் தேதி வரை ரூ. 120.3 கோடியாக மாத உண்டியல் காணிக்கையாக உள்ளது. இது ஒரு சாதனையாகும். இனி வரும் நாட்களிலும் இது தொடரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதன் படி இந்த இலக்கு தொடர்ந்தால், வரும் 2023-ம் ஆண்டு உண்டியல் காணிக்கை ரூ. 1,500 கோடியை கடக்கும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏழுமலையானை 2.35 கோடி பக்தர்கள் தரிசித்துள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று ஜனவரி 1-ம் தேதி நள்ளிரவு சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக மட்டுமே 10 நாட்கள் வரை சொர்க்க வாசலை திறந்திருக்க திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முன் வந்தது. ஆதலால் வைகுண்ட ஏகாதசி, துவாதசிக்கு மட்டுமின்றி தொடர்ந்து 10 நாட்கள் வரை சாமானிய பக்தர்களும் சுவாமியை தரிசித்து விட்டு சொர்க்கவாசல் வழியாக வெளியே வருகின்றனர்.
இம்முறை 1-ம் தேதி நள்ளிரவு முதல் வரும் 11-ம் தேதி நள்ளிரவு வரை சொர்க்க வாசல் திறந்திருக்கும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதற்காக ஏற்கனவே ரூ. 300 ஆன்லைன் டிக்கெட்டுகளையும், வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளையும் தேவஸ்தானம் இணையத்தில் விநியோகம் செய்து விட்ட நிலையில், தற்போது இன்று 1-ம் தேதி மதியம் 2 மணி முதல், திருப்பதியில் 8 இடங்களில் சொர்க்க வாசல் தரிசனத்திற்காக தர்ம தரிசன டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
4.5 லட்சம் டிக்கெட்டுகள்: அதன்படி வரும் ஜனவரி மாதம் 11ம் தேதி வரை, 10 நாட்களுக்கு 4.5 லட்சம் டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட உள்ளன. நாளை முதல் தரிசன டிக்கெட்டுகள் உள்ளவர்களுக்கு மட்டுமே திருமலை செல்ல அனுமதி என ஏற்கனவே தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், முககவசமும் கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. வரும் 2-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT