Last Updated : 31 Dec, 2022 02:54 PM

1  

Published : 31 Dec 2022 02:54 PM
Last Updated : 31 Dec 2022 02:54 PM

‘கால்பந்து கடவுள்’ பீலேவுக்கு சிலை வைத்த பெங்களூரு தமிழர்கள்: மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்

பெங்களூரு: கால்பந்து கடவுள் என அழைக்கப்படும் பீலேவுக்கு இந்தியாவிலே முதல் முறையாக பெங்களூருவில் தமிழர்கள் சிலை வைத்து கவுரவித்துள்ளனர். அவரது மறைவை தொடர்ந்து பீலேவின் சிலைக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பெங்களூருவில் உள்ள அல்சூர் அருகே கவுதமபுரம் உள்ளது. இந்த நகரின் பழைய பெயர் 'கன் ட்ரூப்' (Gun Troop). இங்கு மெட்ராஸ் இன்ஜினியர்ஸ் குரூப் ராணுவத்தின் 515வது துப்பாக்கி தொழிற்சாலை அமைந்திருந்ததால் இந்த பகுதி 'கன் ட்ரூப்' என அழைக்கப்பட்டது. இங்கு நூறாண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்ற‌னர்.

ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இங்குள்ள தமிழர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கால்பந்து விளையாடி வருகின்றனர். 1948 ஆம் ஆண்டு நடைபெற்ற‌ ஒலிம்பிக் போட்டியில் இந்திய கால்பந்து அணியில் இடம்பெற்ற சதார் பஷீர் இந்த ஊரை சேர்ந்தவர். இவரைத் தொடர்ந்து 'இந்தியாவின் பீலே' என அழைக்கப்பட்ட பி.கண்ணன், 'கருப்பு முத்து' என்.உலகநாதன், ஜெகநாதன், அலெக்ஸாண்டர், அருமைநாயக‌ம், சுந்தர் ராஜன் உள்ளிட்டோர் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளனர்.

கவுதமபுரத்தை சேர்ந்த கால்பந்தாட்ட வீரர்கள் பெரும்பாலனோர் கால்ப‌ந்து கடவுள் என அழைக்கப்படும் 'பீலே'வின் ரசிகர்கள். 1977ல் பீலே முதல் முறையாக இந்தியாவுக்கு வந்த போது இங்கிருந்து கொல்கத்தா சென்ற கவுதமபுர கால்பந்து வீரர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அவர் மீது கொண்ட அளவற்ற அன்பினால் தங்களது கால்பந்து அணிக்கு 'லிட்டில் பிரேசில்' என பெயர் சூட்டினர்.

மேலும் கடந்த 2001 ஆம் ஆண்டு புத்தர், பாபாசாகேப் அம்பேத்கர், அன்னை தெரசா வரிசையில் பீலேவுக்கும் சிலை வைத்தனர். இந்தியாவிலே முதல் முறையாக பீலேவுக்கு சிலை வைக்கப்பட்டது கவுதமபுரத்தில் தான். ஊரின் முகப்பில் அமைந்திருக்கும் இந்த பீலே சிலையின் முன்பாகவே ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளின் போது கேக் வெட்டி கொண்டாடுவர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் பீலே மறைந்த செய்தியை அறிந்த கவுதமபுரத்தின் கால்பந்து ஆட்ட ரசிகர்கள் மிகவும் சோகமடைந்தனர். அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், மெழுகு திரிகளை ஏற்றியும் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து முன்னாள் கால்பந்தாட்ட வீரர்கள் பீலேவின் ஆட்டத்திறன் குறித்து உரையாற்றினர். அப்போது கால்பந்து ஆட்ட வீரர் ஜோசப் பீட்டர் பேசுகையில், ''கவுதமபுரத்தில் பீலேவுக்கு சிலை வைக்கப்பட்ட செய்தி நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு செய்திதாள்களில் வெளியானது. அதனை படித்து பீலே மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அடுத்த முறை இந்தியா வரும்போது கவுதமபுரத்துக்கு வருவதாக தெரிவித்தார். ஆனால் அதற்குள் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதால் இங்கு வர முடியாமல் போனது. தற்போது மரணம் குறுக்கிட்டு, இனி அதற்கு வாய்ப்பு இல்லாமல் செய்துவிட்டது''என உருக்கமாக தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x