Published : 31 Dec 2022 02:36 PM
Last Updated : 31 Dec 2022 02:36 PM

“எங்களுக்கு இந்திய ஒற்றுமை யாத்திரை வெற்றிகரமானது” - காரணங்களை அடுக்கிய ராகுல் காந்தி

ராகுல் காந்தி | படம்: ஆர்.வி. மூர்த்தி

புதுடெல்லி: "இந்திய ஒற்றுமை யாத்திரை எங்களுக்கு வெற்றிகரமான ஒன்று. இந்த யாத்திரை பல முடிவுகளை எட்டியுள்ளது. இதன்மூலம புதிய வழியில் சிந்திக்க முயல்கிறேன்" என்று தனது ஒற்றுமை யாத்திரை குறித்து ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியது, பாதுகாப்பு விதிகளை மீறியது என ராகுல் காந்தியின் மீதான அரசு தரப்பு குற்றச்சாட்டு, டெல்லியில் நடந்த யாத்திரையின் போது ராகுல் காந்திக்கு டெல்லி போலீசார் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்ற காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு ஆகியவற்றுக்கு மத்தியில், காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை யாத்திரை குறித்து சனிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார். அப்போது அவர் கூறியது: "பாஜக அரசு காரணம் ஏதும் இல்லாமல், யாத்திரையின்போது நான் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாகக் கூறி பாதுகாப்பு படையினரை வைத்து வழக்கு தொடர முயற்சிக்கிறது.

உள்துறை அமைச்சகம் நான் குண்டு துளைக்காத வண்டியில் பயணம் செய்ய வேண்டும் என்று கூறுகிறது. நான் கால்நடை யாத்திரையில் இருக்கும்போது வாகனத்தில் எப்படி செல்ல முடியும்? பாதுகாப்பு விஷயங்களை எப்படி செய்ய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனாலும். அவர்கள் அதை ஒரு பிரச்சினையாக மாற்றுகின்றனர்.

நாட்டில் பாஜகவுக்கு மிகப் பெரிய எதிர்ப்பலை உள்ளது. பாஜகவுக்கு எதிரான மாற்றுப் பார்வையில் வலிமையாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். எல்லா எதிர்கட்சித் தலைவர்களும் யாத்திரையில் இணைந்திருந்தனர். ஆனாலும், சில அரசியல் நிர்பந்தங்கள் இருக்கின்றன என்பதை நான் உணர்கிறேன். எதிர்க்கட்சித் தலைவர்கள் சுதந்திரமாக இருப்பதை காங்கிரஸ் உறுதி செய்யும்.

இந்திய ஒற்றுமை யாத்திரை எல்லோருக்கும் பொதுவானது. அதில் யார் கலந்துகொள்கிறார்கள், கலந்துகொள்ளவில்லை என்பது குறித்து நான் கருத்து கூற முடியாது. பொதுவாகவே அன்புக்கும் வெறுப்புக்கும் நிறைய இடைவெளியும், வேறுபாடும் இருக்கிறது. ஆனாலும் பலர் அன்பை பரப்பவே நினைக்கின்றனர். அகிலேஷ் ஜியும், மாயாவதி ஜியும் வெறுப்பை விரும்ப மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்.

இந்த யாத்திரையின் முக்கிய நோக்கமே வெறுப்புக்கு எதிராக தேசத்தை இணைப்பதுதான். எங்களைப் பொறுத்தவரை இந்த யாத்திரை வெற்றிகரமான ஒன்று. இதன்மூலம் பல முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். நான் புதிய வழியில் சிந்திக்க முயல்கிறேன்.

யாத்திரைக்கு எதிராக பாஜக பல பிரச்சாரங்களை மேற்கொள்கிறது. ஆனால், அவர்களால் உண்மையுடன் போராட முடியாது. அவர்களிடம் நிறைய பணம் உள்ளது. அதை வைத்து அவர்களால் என்ன செய்ய முடியும்? உண்மையுடன் போராட முடியாது. நான் இந்த யாத்திரையை எந்த முன்முடிவும் இல்லாமல் தொடங்கினேன். இந்தப் பயணத்தில் நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டுள்ளேன்.

அவர்கள் (பாஜக, ஆர்எஸ்எஸ்) இன்னும் வலிமையாக எங்களைத் தாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது, காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தங்களைப் புரிந்து கொள்ள உதவும். நான் அவர்களை எனது ஆசிரியர்களாக கருதுகிறேன். நான் எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதை எனக்கு உணர்த்தி, அதற்கான பாதையை காட்டியுள்ளனர்" என்று ராகுல் காந்தி கூறினார்.

இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தொடர்ந்து டெல்லி குளிரில் ராகுல் காந்தி டி-ஷர்டுடன் நடப்பது குறித்தே கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, "நான் இன்னும் குளிராக உணரவில்லை. அப்படி உணரும்போது வேறு உடைகளை அணிவேன்”என்றார். மேலும், “யாத்திரை முடிந்ததும் இதுகுறித்த ரகசியத்தை வீடியோவாக வெளியிடுவேன்" என்று அவர் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி ராகுல் காந்தி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த யாத்திரை தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களைக் கடந்து அதன் 108-வது நாளில் டெல்லிக்குள் நுழைந்துள்ளது. கடந்த 24-ம் தேதி டெல்லிக்குள் நுழைந்த யாத்திரை அன்று மாலை செங்கோட்டையில் நிறைவடைந்து. 9 நாட்கள் ஓய்வுக்கு பிறகு ஜனவரி 3-ஆம் தேதி மீண்டும் டெல்லியில் இருந்து யாத்திரை தொடங்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x