Published : 31 Dec 2022 06:27 AM
Last Updated : 31 Dec 2022 06:27 AM

தாய் ஹீராபென் இறந்தபோதும் காணொலி மூலம் - வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர்

கொல்கத்தா: தாயார் ஹீராபென் இறந்தபோதும், அரசு நிகழ்ச்சியை ரத்து செய்யாமல் ஹவுரா-நியூ ஜல்பைகுரி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து உரையாற்றினார்.

ஹவுரா- நியூஜல்பைகுரி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், மேற்கு வங்கத்தில் ரூ.5,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டத்தையும் பிரதமர் மோடி நேற்று நேரில் தொடங்கி வைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், எதிர்பாராதவிமாக, உடல்நலம் பாதிக்கப்பட்டு குஜராத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரதமர் மோடியின் தாய் ஹீராபென்(100) நேற்று அதிகாலை இறந்தார். இதனால் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று அதிகாலை குஜராத் புறப்பட்டு சென்றார்.

நேற்று காலை நடந்த தாயாரின் இறுதிச்சடங்கில் அவர் பங்கேற்றார். பிரதமர் மோடி நேற்று பங்கேற்கும் நிகழ்ச்சிகள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை என்றும், நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்பார் என பிரதமர் அலுவலகம் கூறியது.

அதன்படி தாயார் இறுதிச்சடங்கில் பங்கேற்ற சிறிது நேரத்தில் ஹவுராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி கலந்துகொண்டார். மேற்குவங்க ஆளுநர் ஆனந்தா போஸ், முதல்வர் மம்தா பானர்ஜி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்டனர்.

ஹவுரா - ஜல்பைய்குரியை இடையே நாட்டின் ஏழாவது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி நேற்று காலை 11.45 மணியளவில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவதது:

உங்கள் அனைவரையும் நான் நேரில் சந்திப்பதாக இருந்தது. ஆனால் தனிப்பட்ட காரணங்களால் என்னால் நேரில் வர இயலவில்லை. அதற்காக நான் உங்களிடமும் மேற்குவங்க மக்களிடமும் மன்னிப்பு கோருகிறேன். ரயில்வே கட்டமைப்புகளை நவீனமயமாக்க மத்திய அரசு இதுவரை இல்லாத அளவில் முதலீடு செய்தள்ளது. நியூ ஜல்பைக்குரி ரயில் நிலையம், விமான நிலையத்துக்கு நிகராக மேம்படுத்தப்பட்டுள்ளது.கிழக்குமற்றும் மேற்கு சரக்கு ரயில்வே வழித்தடங்கள் நாட்டின் பொருளா தாரத்தில் புரட்சிகரமான மாற்றங் களை கொண்டு வரும்.

‘வந்தே மாதரம்’ கோஷம் உருவான மண்ணிலிருந்து வந்தே பாரத் ரயில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 30-ம் தேதி முக்கியமான நாள். அந்தமான் நிகோபார் தீவுகளில் கடந்த 1943-ம் ஆண்டில் இதே நாளில்தான் சுபாஷ் சந்திரபோஸ் தேசிக் கொடியை ஏற்றினார். இவ்வாறு மோடி பேசினார்.

பிரதமர் மோடி வராததால் உற்சாகம் இழந்த குழந்தைகள்: வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் பிரதமர் மோடியுடன் பயணம் செய்வதற்காக, கட்டுரை போட்டி நடத்தப்பட்டு 50 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் இந்த விழாவில் பங்கேற்க நேற்று வந்திருந்தனர். பயணத்தில் பிரதமருடன் சந்தித்து கலந்துரையாடலாம் என திட்டமிட்டிருந்தனர். ஆனால், இந்நிகழ்ச்சியில் பிரதமர் இல்லாததால் குழந்தைகள் உற்சாகம் இன்றி காணப்பட்டனர்.

இது குறித்து ஹவுராவில் உள்ள கே.வி.கமாண்ட் பள்ளி மாணவர் தாஸ் கூறுகையில், ‘‘இந்த நிகழ்ச்சி தேர்வுக்கு தயாராவோம் நிகழ்ச்சியில் பிரதமருடன் கலந்துரையாடுவது போல் இருக்கும் என நினைத்தேன். ஆனால் பிரதமர் வராதது எங்களது உற்சாகத்தை குறைத்துவிட்டது. தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் வராததை நாங்கள் புரிந்துகொண்டோம்’’ என்றார்.

கிழக்கு ரயில்வே உயர்நிலை பள்ளி மாணவர் ஹேமந்த் பண்டிட் கூறுகையில், ‘‘பிரதமரின் தாயார் இறந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. பிரதமர் இந்நிகழ்ச்சியில் இருக்க வேண்டும் என விரும்பினோம். அவர் இல்லாதது எங்கள் உற்சாகத்தை சற்று குறைத்தாலும், வந்தே பாரத் ரயிலில் முதன் முதலில் ஏறுவது மிகவும் மகிழ்ச்சி’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x