Last Updated : 31 Dec, 2022 06:36 AM

 

Published : 31 Dec 2022 06:36 AM
Last Updated : 31 Dec 2022 06:36 AM

தயவுசெய்து சற்று ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் - பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா பானர்ஜி அறிவுரை

புதுடெல்லி: பிரதமர் மோடியின் தாய் இறந்ததை, வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.

பிரதமர் மோடியின் 100 வயது தாயான ஹீராபென் மோடி நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் காலமாகி இருந்தார். இதன் பிறகும் அவர் ஏற்கெனவே திட்டமிட்டபடி, மேற்குவங்க மாநில நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கொல்கத்தாவின் ஹவுராவிலிருந்து நியூ ஜல்பாய்குடி வரையிலான வந்தே பாரத் எனும் புதிய ரயிலை பிரதமர் நரேந்திரமோடி துவக்கிவைத்தார்.

பாஜக தலைமையில் ஆளும் மத்திய அரசின் முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றாக திரிணமூல் காங்கிரஸ் உள்ளது. இதன் தலைவருமான மம்தாவிற்கும் பிரதமர் மோடிக்குமான மோதல் பலமுறை ஏற்பட்டுள்ளது. இதனால், தேசிய அரசியலில் பிரதமர் மோடியை தனது முக்கிய எதிரியாகக் கருதுகிறார் முதல்வர் மம்தா. இச்சுழலில் அவர் பிரதமர் மோடி தாயின் இறப்பை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.

இந்நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பேசியதாவது: தங்கள் தாய் இறந்தமையால் இந்த நாள் தங்களுக்கு துக்கமானது. இதன்பிறகும் நீங்கள் காணொலி வாயிலாக இந்த விழாவில் கலந்துகொள்வது மிக்க மகிழ்ச்சி. இறந்தவர் உங்கள் தாய் மட்டும் அல்ல, அவர் எங்களுக்கும் தாய் ஆவார். தங்கள் செயல்பாடுகள் தொடர பலம் அளிக்க கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக! உங்களது தாயின் இறப்பிற்கு என்னால் எப்படி தேற்றுவது என்றே தெரியவில்லை. தயவுசெய்து சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

வந்தே பாரத் ரயில் துவக்க விழாவில் பாஜக தொண்டர்கள் கோஷ மிட்டனர். இதனால் கோபம் அடைந்த முதல்வர் மம்தா பானர்ஜி நிகழ்ச்சி மேடையில் ஏறவில்லை. அவர் பார்வையாளர் வரிசையில் அமர்ந்து கொண்டார். இதையடுத்து மேற்குவங்க ஆளுநர் போஸும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் முதல்வர் மம்தா சமரசம் செய்து மேடைக்கு அழைக்க முயன்றனர். ஆனால் மம்தா பானர்ஜி மறுத்துவிட்டார்.

ஹீராபென்னுக்கு சேலை: அரசியல் ரீதியாக பிரதமர் மோடியை, மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்த்தாலும், தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாருடன் நட்புடன் பழகியுள்ளார். உதாரணமாக மேற்குவங்க மாநிலத்தின் பிரபலமான கைத்தறி நெசவில் தயாரான சேலைகளை ஹீராபென் மோடிக்கு முக்கிய நாட்களில் முதல்வர் மம்தா அனுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x