Published : 30 Dec 2022 02:32 PM
Last Updated : 30 Dec 2022 02:32 PM

பிரதமர் மோடியின் தாயார் மறைவு - ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

தாயாருடன் பிரதமர் மோடி | கோப்புப்படம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அன்பையும் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அதிகாலை அவர் உயிரிழந்தார். தாயாரின் மறைவையத் தொடர்ந்து அகமதாபாத் விரைந்த பிரதமர் மோடி, தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். இறுதிச்சடங்கு எளிய முறையில் இன்று நடைபெற்றது. பிரதமரின் குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் பிரதமரின் தாயார் மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அன்பினை பகிர்கிறேன்: பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில், ''பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்னின் மறைவு செய்தி மிகவும் துயரம் தருகிறது. இது ஒரு கடினமான நேரம். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், பிரதமர் மோடிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது அன்பினைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அனைவருக்கும் அவர் முன்மாதிரி: பிரதமரின் தாயார் மறைவுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்," பிரதமரின் தாயார் ஹீராபென் மறைவு மிகவும் துயரமானது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவருடைய அம்மாதான் முதல் தோழி; முதல் ஆசிரியை. அம்மாவை இழப்பது உலகத்தில் மிக அதிக வலியைத் தரக்கூடிய ஒன்று. குடும்பத்தை பேணுவதற்கு ஹீராபென் எதிர்கொண்ட போராட்டங்களும் அவரின் தியாக வாழ்வும் அனைவருக்குமான முன்மாதிரியாகும். இந்த துயரமான நேரத்தில் பிரதமர், அவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக இந்த தேசமே நிற்கிறது. நாடு முழுவதும் மக்களின் பிரார்த்தனைகள் உங்களுடன்(பிரதமர் மோடியுடன்) இருக்கிறது. ஓம் சாந்தி.'' என்று தெரிவித்துள்ளார்.

தாயின் இடத்தை ஈடுசெய்ய முடியாது: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது இரங்கல் குறிப்பில், ''பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவுச்செய்தி மிகுந்த வலியைத் தருகிறது. தாயரை இழப்பது என்பது மிகவும் துயரம் மிகுந்தது மற்றும் யாராலும் ஈடுசெய்ய முடியாதது. இந்த நேரத்தில் பிரதமருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்று தெரிவித்துள்ளார்.

அவர் வாழ்க்கை ஊக்கமளித்தது: வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது இரங்கல் குறிப்பில், "பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். அவரது வாழ்க்கை மிகவும் ஊக்கம் அளிப்பதாக இருந்தது. அவரது ஆன்மா இறைவனின் பாதத்தில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் பிரதமருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்தார்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவின் மூலம் ஒரு துறவின் வாழ்க்கை நிறைவடைந்துள்ளது. ஆர்எஸ்எஸ்-ன் ஒவ்வொரு ஸ்வயம்சேவகர்களும் அவரது ஆன்மாவுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். அந்த தாய் தனது வாழ்க்கையில் எந்த துயரைச் சந்தித்தபோதிலும் இறைவன் மீது மிகுந்த நம்பிக்கையையும், வாழ்வின் மதிப்புகள் மீது பிடிப்பும் கொண்டிருந்தார். தனது கடமைகளைச் சரிவர செய்த அவர் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்தார். பிரதமருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.'' என்று தெரிவித்துள்ளார்.

ஒரு நூற்றாண்டு இறைவனடி சேர்ந்தது: முன்னதாக, தாயாரின் மறைவைக்குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,"ஒரு போற்றத்தக்க நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது. ஒரு துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் என் தாயிடம் உணர்ந்தேன். புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க்கையை வாழுங்கள் என்று 100வது பிறந்தநாளின்போது சந்தித்த போது என் தாய் சொன்ன வார்த்தைகள் எப்போதும் என் நினைவில் இருக்கும்" என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x