Published : 30 Dec 2022 11:16 AM
Last Updated : 30 Dec 2022 11:16 AM
பெங்களூரு: 'இந்துக்கள் வீட்டில் கூர்மையான ஆயுதங்களை வைத்துக் கொள்ள வேண்டும்' என பேசியதற்காக போபால் தொகுதி பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் மீது கர்நாடக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் ஷிவமோகாவில் இந்து ஜாக்ரனா வேதிகே அமைப்பின் ஆண்டு மாநாடு கடந்த 25-ம் தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற போபால் தொகுதி பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர், ''அவர்களுக்கு (இஸ்லாமியர்) லவ் ஜிகாத் செய்வது கலாச்சாரம். நாம் அதனை ஏற்கக் கூடாது. உங்கள் மகள்களை லவ் ஜிகாத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீடுகளில் கூர்மையான ஆயுதங்களை வைத்திருங்கள். ஆயுதங்கள் இல்லாவிட்டால் காய்கறி வெட்டும் கத்தியாவது வைத்துக் கொள்ளுங்கள்'' என பேசினார்.
பிரக்யா சிங் தாக்கூரின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஷிவமோகா மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுந்தரேஷ், கோட்டே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், "பிரக்யா சிங் தாக்கூர் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளார். அவரது பேச்சு இரு பிரிவினரிடையே வெறுப்பு, கலவரம் ஆகியவற்றை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரையடுத்து கோட்டே போலீஸார் பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 153 ஏ பிரிவு (இரு பிரிவினரிடையே பகையை ஏற்படுத்துதல்), 295 ஏ (மத உணர்வுகளை தூண்டிவிடுதல்) உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கு பாஜக, இந்து ஜாகர்ண வேதிகே உள்ளிட்ட அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT