Published : 30 Dec 2022 03:54 AM
Last Updated : 30 Dec 2022 03:54 AM

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க புதிய ‘ஆர்விஎம்’ இயந்திரம் அறிமுகம் - ஜன. 16-ம் தேதி செயல் விளக்கம்

புதுடெல்லி: உள்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது. இது தொடர்பாக ஜன. 16-ம் தேதி நடைபெறும் செயல் விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தேசிய, மாநிலக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் ‘ஆர்விஎம்’ (ரிமோட் எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) என்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உள்நாட்டில் புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக ஆர்விஎம் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்மாதிரியான இந்த இயந்திரம், பல தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களும் வாக்களிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது 72 தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள், ஒரே இயந்திரத்தில் வாக்களிக்க முடியும்.

வரும் ஜன. 16-ம் தேதி ஆர்விஎம் இயந்திர செயல்பாடுகள் குறித்து நேரடி விளக்கம் அளிக்கப்படுகிறது. இதில் பங்கேற்குமாறு 8 தேசியக் கட்சிகள் மற்றும் 57 மாநிலக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த புதிய நடைமுறை தொடர்பாக ஏற்கெனவே அரசியல் கட்சிகளிடம் கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஜன. 31-ம் தேதிக்குள் தங்கள் கருத்துகளை தலைமை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்குமாறு கோரியுள்ளோம்.

உள்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கிருந்தாலும் வாக்களிக்க சட்டத் திருத்தம் மேற்கொள்வது, நிர்வாக நடைமுறைகள், வாக்கு செலுத்தும் முறை, ஆர்விஎம் தொழில்நுட்பம் உள்ளிட்டவை தொடர்பான கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

பல்வேறு மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் இதன் மூலம் வாக்களிக்கலாம். இந்த இயந்திரம் வேறு எந்தக் கருவியுடனும் இணைக்கப்படவில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி மிகுந்த யுகத்தில், புலம்பெயர்ந்தவர்களின் அடிப்படை உரிமையை மறுப்பது சரியாக இருக்காது. எனவே, அவர்கள் உள்நாட்டில் எங்கிருந்தாலும், தேர்தலில் வாக்களிக்கும் நோக்கில் இந்த இயந்திரம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் 67.4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. 30 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களிக்கவில்லை. புலம் பெயர்ந்தவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் வாக்காளர் பெயர் பதிவு செய்தால், சொந்த தொகுதியில் தங்கள் பெயர் நீக்கப்படும் என்று அச்சப்படுவதால், அவர்கள் வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே, பல மாநில புலம்பெயர் தொழிலாளர்கள், ஒரே வாக்குச் சாவடியில் வாக்களிக்க இந்த இயந்திரம் பயனுள்ளதாக இருக்கும்.

எனினும், ஆர்விஎம் இயந்திரத்தை அறிமுகம் செய்வதற்கு முன், யார் யார் புலம்பெயர் தொழிலாளர்கள், அவர்களை வரையறை செய்வது எப்படி, தேர்தலின்போது ஆள் மாறாட்டத்தை தடுப்பது எப்படி, தேர்தல் அலுவலர்கள் நியமனம், கண்காணிப்புப் பணி, தேர்தல் நடத்தை விதிமுறைகள், வாக்களிக்கும் ரகசியத்தைப் பாதுகாப்பது, புலம்பெயர் வாக்காளர்களை அடையாளம் காண்பது, ரிமோட் முறையில் வாக்களிப்பது, அவற்றை எண்ணுவது உள்ளிட்ட சிக்கல்களுக்குத் தீர்வுகாண வேண்டும்.

மேலும், மக்கள் பிரதிநிதிகள் சட்டம், தேர்தல் நடத்தை விதிமுறைகள், வாக்காளர் பதிவு சட்டம் போன்றவற்றில் திருத்தம் கொண்டுவரவேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023-ல் 9 மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது ஆர்விஎம் இயந்திரத்தை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தவும், அதில் வெற்றி கிடைத்தால் 2024 மக்களவைத் தேர்தலில் முழுவதுமாகப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x