Published : 29 Dec 2022 08:46 PM
Last Updated : 29 Dec 2022 08:46 PM
புதுடெல்லி: கரோனா மேலாண்மைக்கான உயிர் காக்கும் மருந்துகள் தயாரிப்பு, இருப்பு மற்றும் சில்லறை வணிக அளவில் விநியோக சங்கிலி ஆகியவற்றை துல்லியமாக கண்காணிக்குமாறு மருந்து நிறுவனங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கரோனா பெருந்தொற்று சில நாடுகளில் வேகமாக பரவி வருவதையடுத்து உயிர் காக்கும் மருந்துகளின் இருப்பு மற்றும் கரோனா மேலாண்மை மருந்துகள் மற்றும் கருவிகள் தயாரிப்பு குறித்து மருந்து நிறுவனங்களிடம் காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை (டிச.29) ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, கரோனா பெருந்தொற்றின்போது மருந்து நிறுவனங்களின் பங்கு குறித்து பாராட்டினார். இந்தியாவின் வலுவான மருந்து துறையின் வலிமையால் நமது உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்ததோடு 150 நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்துள்ளோம். இவற்றின் தரத்தில் எந்த குறைவில்லாமலும் அதே நேரத்தில் விலையை உயர்த்தாமலும் இந்த சாதனை மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் சர்வதேச விநியோக சங்கிலியின் போக்கை தொடர்ந்து கண்காணிக்குமாறு மருந்து நிறுவனங்களை அமைச்சர் கேட்டுக் கொண்டார். கரோனா மேலாண்மைக்கான உயிர் காக்கும் மருந்துகள் தயாரிப்பு, இருப்பு மற்றும் சில்லறை வணிக அளவில் விநியோக சங்கிலி ஆகியவற்றை துல்லியமாக கண்காணிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
சரியான நேரத்தில் ஆய்வு கூட்டத்தை நடத்திய மத்திய அமைச்சருக்கு மருந்து நிறுவனங்கள் பாராட்டு தெரிவித்து ஆதரவை தொடர்ந்து வழங்குவதாக தெரிவித்தன. மேலும் கரோனா மருந்துகள் விநியோக சங்கிலியை பராமரிப்பதற்கான நம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்தினர். இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷன், மருந்துத் துறை செயலாளர் எஸ்.அபர்ணா மற்றும் பல்வேறு மருந்து நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகள், புறப்படுவதற்கு முன் கட்டாயமாக ஆர்டிபிசிஆர் சோதனைகளைச் செய்து, ஜனவரி 1, 2023 முதல் ஏர் சுவிதா போர்ட்டலில் அறிக்கையைப் பதிவேற்ற வேண்டும். இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்திற்குள் இந்த சோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கு வரும் அனைத்து சர்வதேச விமானங்களிலும், பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் 2 சதவீத சீரற்ற சோதனைகளுக்கு கூடுதலாக இந்தச் சோதனை மேற்கொள்வது அவசியமாகிறது. உலகம் முழுவதும் குறிப்பாக மேற்கூறிய நாடுகளில் நிலவும் கோவிட்-19 சூழலைக் கருத்தில் கொண்டு இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT