Published : 29 Dec 2022 12:38 PM
Last Updated : 29 Dec 2022 12:38 PM
புதுடெல்லி: டெல்லியில் நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது ராகுல் காந்தி பலமுறை பாதுகாப்பு வளையத்தை அத்துமீறினார் என்று சிஆர்பிஎஃப் பதிலடி கொடுத்துள்ளது. டிச.24 யாத்திரையின் போது ராகுல் காந்தி பாதுகாப்பில் சிஆர்பிஎஃப், காவல்துறை மெத்தமனமாக இருந்ததாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டிய நிலையில் சிஆர்பிஎஃப் இந்த விளக்கத்தை வழங்கியுள்ளது.
முன்னதாக, ராகுல் காந்தி Z+ பாதுகாப்பைப் பெற்றவர் என்பதால் அவருக்கு போதுமான பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், அவரோடு பாத யாத்திரையில் பங்கேற்க இருக்கும் தலைவர்கள் தொண்டர்கள் அனைவருக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் நேற்று மத்திய அரசுக்கு வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தது.
இந்நிலையில் டெல்லியில் நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது ராகுல் காந்தி பலமுறை பாதுகாப்பு வளையத்தை அத்துமீறினார் என்று சிஆர்பிஎஃப் பதிலடி கொடுத்துள்ளது.
மேலும் சிஆர்பிஎஃப் தரப்பில், ராகுல் காந்தியின் டிசம்பர் 24 யாத்திரையை முன்னிட்டு 2 நாட்களுக்கு முன்னதாகவே அட்வான்ஸ் செக்யூரிட்டி லயசன் ஆலோசனை நடைபெற்றது. அதாவது சிஆர்பிஎஃப் மற்றும் மாநில போலீஸார் இணைந்து விஐபி பாதுகாப்பு பற்றி ஆலோசிக்கும் கூட்டம் அது. அந்தக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படியே பாதுகாப்பு வழங்கப்பட்டது. பாதுகாப்பு வளையத்தை ராகுல் காந்தி தான் அத்துமீறினார். இதுபோன்று பாதுகாப்பு வளையங்களை ராகுல் மீறுவது இது முதன்முறை அல்ல. கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை 113 முறை ராகுல் தனது பாதுகாப்பு வளையத்தை மீறியிருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ராகுல் காந்தி டெல்லியில் பாதுகாப்பு வளையத்தை மீறியது குறித்து விளக்கம் கோரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
கே.சி.வேணுகோபால் கடித விவரம்: காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் நேற்று எழுதிய கடிதத்தில், ''ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை கடந்த 24ம் தேதி டெல்லி வந்தபோது அதிக அளவில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தன. ராகுல் காந்தி Z+ பாதுகாப்பைப் பெற்றவர். ஆனால், அவருக்கு உரிய பாதுகாப்பை டெல்லி போலீசார் வழங்கவில்லை. காங்கிரஸ் தொண்டர்கள்தான் ராகுல் காந்திக்காக பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி அவரை பாதுகாத்தனர். டெல்லி போலீஸார் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
இந்திய ஒற்றுமை யாத்திரையில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பதை தடுக்கும் நோக்கில் புலனாய்வு அமைப்புகள் செயல்படுவது தெரியவந்துள்ளது. யாத்திரையில் பங்கேற்ற பலரிடம் புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி உள்ளனர். ஹரியாணா மாநில புலனாய்வு பிரிவினர் சிலர் இந்திய ஒற்றுமை யாத்திரைக்குள் சட்டவிரோதமாக நுழைந்தது தொடர்பாக கடந்த 23-ம் தேதி சோனா சிட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்.
நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக பாடுபட்ட இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகிய இரண்டு பிரதமர்களை தியாகம் செய்த கட்சி காங்கிரஸ். கடந்த 2013 மே 25ம் தேதி நடந்த நக்ஸல் பயங்கரவாத தாக்குதலில் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர்களை நாங்கள் ஒட்டுமொத்தமாக இழந்தோம்.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை வரும் ஜனவரி 3-ம் தேதி மீண்டும் தொடங்க இருக்கிறது. மிகவும் பதற்றமான பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் இந்த பாத யாத்திரை செல்ல இருக்கிறது. Z+ பாதுகாப்பைப் பெற்றவர் என்பதால் ராகுல் காந்திக்கு போதுமான பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், அவரோடு பாத யாத்திரையில் பங்கேற்க இருக்கும் தலைவர்கள் தொண்டர்கள் அனைவருக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்'' என கேட்டுக் கொண்டிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT