Published : 29 Dec 2022 07:27 AM
Last Updated : 29 Dec 2022 07:27 AM
புதுடெல்லி: தொழில்செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு,தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் ‘ஜான் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) - 2022’ என்ற புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துள்ளது.
சுற்றுச்சூழல், வேளாண்மை,உணவு, அஞ்சல் சேவை, ரயில்வே, தகவல் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் சில சட்டங்களின் கீழ் சிறிய அளவிலான குற்றங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இந்நிலையில், தொழில் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு, சிறு குற்றங்களுக்கான சிறை தண்டனையை நீக்கவும், சிறை தண்டனைக்குப் பதிலாக அபராதத் தொகையை உயர்த்தவும் முடிவுசெய்துள்ளது. இது தொடர்பான மசோதா கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இம்மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினர்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய வனச் சட்டம் 1972-ன் கீழ், வனப் பகுதியில் அத்துமீறி நுழைதல், கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு சிறை தண்டனையும் ரூ.500 அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தச் சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனையை நீக்க புதிய மசோதாவில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன் படி, விதிமுறைகளை மீறி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கழிவுகளை வெளியேற்றினால் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தக் குற்றத்துக்கான சிறை தண்டனை நீக்கவும்அபராதத் தொகையை உயர்த்தவும்புதிய மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக 42 விதிகளில் சிறை தண்டனையை நீக்கபரிந்துரைக்கப்பட்டுள்ளது. குற்றத்தின் தீவிரத்தைப் பொருத்து அபராதம் விதிக்கப்படும் என்றும் அபராதத் தொகையை முடிவு செய்வதற்கு அலுவலர் நியமிக்கப்படுவர் என்றும் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் கூறுகையில், “சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த சிறு குற்றங்களுக்கு விதிக்கப்படும் சிறை தண்டனையால், மக்கள் தொழில் தொடங்க தயக்கம் காட்டுகின்றனர். இதனால், தொழில் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் சிறு குற்றங்களுக்கான சிறை தண்டனையை நீக்கி, அபராதத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தொழில் தொடங்குதல் மேலும் எளிமையாகும்” என்று தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT