Published : 29 Dec 2022 07:11 AM
Last Updated : 29 Dec 2022 07:11 AM

அமெரிக்காவின் உறைபனி ஏரியில் விழுந்து குண்டூர் தம்பதி உட்பட 3 பேர் உயிரிழப்பு

உயிரிழந்த நாராயணா - ஹரிதா தம்பதியினர்.

குண்டூர்: அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் தற்போது கடும் குளிர் ஏற்பட்டுள்ளது. அதிலும் அமெரிக்காவில் ‘பாம்ப்’ புயலால் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். இதுவரை 32க்கும் மேற்பட்டோர் இறந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிலர் காரிலேயே உறைந்து உயிரை விட்டுள்ளனர். டெக்சாஸ், சிகாகோ, நியூயார்க், ஓஹியோ ஆகிய மாகாணங்களில் விமான போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், பாலபர்ரகு பகுதியை சேர்ந்த நாராயணா (40), ஹரிதா (36) தம்பதியினர் தங்களது 2 மகள்களுடன் அங்குள்ள அரிசோனா மாகாணத்தில் கடந்த 7 ஆண்டுகளாக வசித்து வந்தனர். தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால், கடந்த திங்கட்கிழமை நாராயணா தனது மனைவிமற்றும் பூஜிதா (12), ஹர்ஷிதா (10) ஆகிய இரு மகள்களுடன் கோகோனினோ பகுதியில் உறைந்த நிலையில் இருக்கும் உட்ஸ் கேன்யன் ஏரியை பார்வையிட காரில் சென்றனர். அவர்களுடன் கோகுல்(47) என்பவரும் உடன் சென்றிருந்தார். ஏரியின் உறைபனியில் ஏறி நின்று அவர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அதன்பின் நாராயணா, கோகல் மற்றும் ஹரிதா ஆகிய மூன்று பேரும் உறைந்த ஏரியில் நடந்து சென்றனர். பூஜிதா, ஹர்ஷிதா ஆகியோர் காரில் இருந்தனர்.

உறைந்த ஏரியில் ஐஸ்கட்டி திடீரென உடைந்ததால், 3 பேரும் ஏரியில் மூழ்கினர். காரில் இருந்த மகள்களின் கண் முன் இவர்கள் ஏரியில் மூழ்கினர். இச்சம்பவத்தை கேள்விபட்டதும் உட்ஸ் கேன்யன் ஏரிக்கு மீட்பு குழுவினர் சென்று ஹரிதாவை மட்டும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.நீரில் மூழ்கிய நாராயணா மற்றும் கோகுலை மீட்பு குழுவினர் சடலங்களாக நேற்று முன்தினம் மீட்டனர்.

குண்டூரில் உள்ள நாராயணாவின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் தகவலறிந்து கதறி அழுதனர். இது குறித்து நாராயணாவின் தந்தை வெங்கடசுப்பாராவ் கூறியதாவது:

சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த நாராயணா, எம்எஸ் படித்து முதலில் மலேசியாவில் வேலை செய்தார். அதன் பின்னர் அமெரிக்காவில் வேலை கிடைத்தது. கடந்த ஜூன் மாதம் மூத்த மகள் பூஜிதா தொடர்புடைய ஒரு விழா இங்கு தான் நடந்தது. அதற்கு அனைவரும் வந்திருந்தனர். அதுவே கடைசி. சில நாட்களுக்கு முன் என்னுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது அமெரிக்காவில் உறைபனி குறித்தும் பேசினார். எங்கள் பகுதியில் அதிகம் பாதிப்பு இல்லை பயப்பட வேண்டாம் என்றார். ஆனால், இப்படி ஆகி விட்டது என கூறி அழுதார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x