Published : 29 Dec 2022 12:23 AM
Last Updated : 29 Dec 2022 12:23 AM
நெல்லூர்: ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சாலைப் பேரணியின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
சந்திரபாபு நாயுடு, "இதேமி கர்மா மன ராஷ்டிரனிகி (நம் மாநிலம் ஏன் இந்த விதியை எதிர்கொள்கிறது?)" என்ற பிரச்சாரத்தை ஆந்திர மாநிலத்தில் யாத்திரை சென்றுவருகிறார். பேரணியின் ஒருபகுதியாக கந்துகூர் நகரில் ஒரு கூட்டத்தில் உரையாற்ற இருந்தார். அதன்படி, நாயுடுவின் கான்வாய் மாலையில் அப்பகுதியை அடைய தொடங்கியதும் நெரிசல் தொடங்கியது. அங்கு திரண்டிருந்த ஏராளமான மக்கள் சந்திரபாபு நாயுடுவை முண்டியடித்தனர்.
நெரிசல் அதிகரிக்கத் தொடங்கியதும் வடிகால் கால்வாயின் சிமெண்ட் தளம் உடைய அதனுள் பலர் விழுந்தனர். இதில் ஒரு பெண் உட்பட மொத்தம் 8 பேர் தங்கள் உயிர்களை பரிதாபமாக இழந்தனர். காயமடைந்த சிலர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை அடுத்து கூட்டத்தை உடனடியாக ரத்து செய்தார் சந்திரபாபு நாயுடு. மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக அறிவித்ததுடன், அந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்வி செலவையும் ஏற்பதாக தெரிவித்தார்.
2024ல் ஆந்திராவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக உள்ள சந்திரபாபு நாயுடு மாநிலம் முழுவதும் தொடர் கூட்டங்களை நடத்தி வருகிறார். ஜனவரியில், சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ், 4,000 கிமீ நடைபயணத்தை தொடங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT