Last Updated : 19 Dec, 2016 02:24 PM

 

Published : 19 Dec 2016 02:24 PM
Last Updated : 19 Dec 2016 02:24 PM

இந்தியாவில் 2009 - 15 வரை 600 காவல் மரணங்கள்: ஆய்வறிக்கை

இந்தியாவில் கடந்த 2009 - 15 வரையிலான காலகட்டத்தில் சுமார் 600 காவல்நிலைய மரணங்கள் நடந்துள்ளதாக அமெரிக்க உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

காவல்துறை அதிகாரிகள், விசாரணைக் கைதிகளிடம் மோசமான முறையில் நடந்துகொள்வதாகவும் சட்ட விதிமுறைகளை மீறுவதாகவும் அக்குழு கூறியுள்ளது.

இதுகுறித்து நியூயார்க்கைச் சேர்ந்த மனித உரிமைகள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் கைதிகளைக் கொடுமைப்படுத்துவது சட்டவிரோதம் என்றாலும், பெரும்பாலான இந்திய காவல்துறை அதிகாரிகள் அப்படி நடந்துகொண்டால் மட்டுமே கைதிகள் உண்மையைப் பேசுவதாகக் கூறியுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரியான ஜெய்ராஜ் சர்மா பேசும்போது, ''கைதிகளிடம் மூன்றாம் தர வார்த்தைகளைப் பயன்படுத்தாவிட்டால் அவர்கள் பேசவே மாட்டார்கள்'' என்கிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015-ல் மட்டும் 97 மரணங்கள்

அரசு தரப்பு அறிக்கையின்படி, 2015-ம் ஆண்டில் 97 பேர் போலீஸ் காவலில் இறந்துள்ளனர். இதில் இரண்டு வகைகளை மட்டுமே காண முடிகிறது. முதலாவதாக 67 வழக்குகளில் கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் விசாரணைக் கைதியை நீதிமன்றத்தில் ஒப்படைக்கக் காவல்துறை தவறியுள்ளது. இரண்டாவதாக கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் கைதிகள் மரணமடைந்துள்ளனர்.

விசாரணைக் கைதிகளைக் கொடுமைப்படுத்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஒழுக்கம் போதிக்கப்பட வேண்டும். முறை தவறினால் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்க வேண்டும்.

தெற்காசிய மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் மீனாட்சி கங்குலி கூறும்போது, ''போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குகள் தொடரப்பட்டால்தான் கைதிகளை அடிப்பது தவறு என்பதைக் கற்றுக்கொள்வார்கள்.

பெரும்பாலான அதிகாரிகள் காவலில் இருக்கும்போதே கைதிகள் மரணமடைந்த வழக்குகளை விசாரிக்கும்போது, நீதியை வெளியே கொண்டுவருவதைக் காட்டிலும், தன் சக அதிகாரிகளைக் காப்பாற்றுவதில்தான் அதிக கவனத்துடன் இருக்கிறார்கள்'' என்றார்.

அதிகாரிகளுக்கு எதிராக தொடரப்படாத வழக்குகள்

''எனக்குத் தெரிந்தவரை சமீப காலங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் தேடப்பட்ட குற்றவாளிகள் மீதான வன்முறைக்கு எதிராக எந்த அதிகாரியும் பதவி நீக்கப்படவில்லை. நிறைய அதிகாரிகள் இடை நீக்கம் செய்யப்படவில்லை, நிறைய வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை'' என்கிறார் காவல்துறையில் உயர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற விக்ரம் சிங்.

114 பக்கங்கள் கொண்ட இக்குழுவின் அறிக்கையில் 2009 முதல் 2015 வரையில் நடைபெற்ற லாக்கப் மரணங்களில், 17 மரணங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இதில் சாட்சிகள், விசாரணைக் கைதிகளின் குடும்பங்கள், நீதித்துறை நிபுணர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என மொத்தம் 70 பேட்டிகள் இதில் உள்ளன.

17 வழக்குகளிலுமே காவல்துறை முறையான கைது நடைமுறைகளைப் பின்பற்றவில்லை; கைதிகளை உரிய முறையில் நடத்தவில்லை; அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x