Published : 28 Dec 2022 06:42 AM
Last Updated : 28 Dec 2022 06:42 AM
பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி சென்ற கார் மைசூருவில் விபத்தில் சிக்கியது. இதில் காயமடைந்த பிரஹலாத் மோடி உள்ளிட்ட 6 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி (66). தனது மனைவி, மகன் குடும்பத்தினருடன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு அரண்மனையை பார்த்துவிட்டு பந்திப்பூர் தேசிய உயிரியல் பூங்காவுக்கு மெர்சடிஸ் பென்ஸ் எஸ்யூவி காரில் சென்றார். கட்கலா என்ற இடத்தில் சென்றபோது கார் சாலையோர தடுப்பின் மீது மோதி விபத்தில் சிக்கியது.
இதில் பிரதமரின் சகோதரர் பிரஹலாத் மோடி, அவரது மனைவி, மகன் மெஹூல் மோடி, மருமகள், பேரன் மெனத் மோடி மற்றும் ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பந்திப்பூர் போலீஸார் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டனர். பிரஹலாத் மோடி உள்ளிட்ட 6 பேரையும் மைசூருவில் உள்ள ஜே.எஸ்.மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதையடுத்து மைசூரு காவல் கண்காணிப்பாளர் சீமா லட்கர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, வாகனத்தையும் ஆய்வு செய்தார்.பிரஹலாத் மோடி மற்றும் அவரதுகுடும்பத்தினர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவ மனைக்கு சென்று உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீமா லட்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பிரஹலாத் மோடிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை. சிகிச்சை முடிந்து இன்னும் சில தினங்களில் குணமடைந்து வீடு திரும்புவர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT