Published : 26 Dec 2022 01:11 PM
Last Updated : 26 Dec 2022 01:11 PM

காஷ்மீரி பண்டிட் சமூக அரசு ஊழியர்களை ஜம்முவுக்கு மாற்ற வேண்டும்: குலாம் நபி ஆசாத்

குலாம் நபி ஆசாத் | கோப்புப்படம்

ஸ்ரீநகர்: "காஷ்மீரில் நிலைமை சரியாகும் வரை அங்கு வேலை செய்யும் காஷ்மீர் பண்டிட் அரசு ஊழியர்களின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக அவர்களை ஜம்முவுக்கு மாற்ற வேண்டும்" என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனநாயக ஆசாத் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் காஷ்மீரி பண்டிட்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்துப் பேசிய குலாம் நபி ஆசாத், "எங்களது ஆட்சி காலத்தில், மத்தியில் அப்போது ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் அரசிடம் காஷ்மீரி பாண்டிட்களுக்கு வேலை வழங்குவதற்கான பரிந்துரை வழங்கினோம். அப்போது 3,000 பேருக்கு வேலை வழங்கப்பட்டது. அப்போது அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. ஆனால் தற்போது பல சம்பவங்கள் நடந்துள்ளன.வேலையை விட உயிர் மிகவும் முக்கியமானது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வேலை செய்யும் காஷ்மீரி பண்டிட் ஊழியர்களை அரசாங்கம் ஜம்முவுக்கு மாற்ற வேண்டும். காஷ்மீரில் நிலைமை சீரானதும் அவர்களை திருப்ப அழைத்துக் கொள்ளலாம்.

எங்களது அரசு பதவிக்கு வந்தால், காஷ்மீரில் நிலைமை சரியாகும் வரை காஷ்மீரி பண்டிட்களை ஜம்முவுக்கு இடமாற்றி விடுவோம்" என்று தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் குலாம் நபி ஆசாத் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. இந்த பிரிவினைக்கு பின்னர் ஜம்மு காஷ்மீர் முதல் முறையாக தேர்தலை சந்திக்க இருக்கிறது.

முன்னதாக, கடந்த வாரத்தில் காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா," பள்ளத்தாக்கு பகுதியில் வேலை செய்யும் காஷ்மீரி பண்டிட் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை என்றால் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது" என்று தெரிவித்திருந்தார்.

தீவிரவாதிகளால் எங்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் நாங்கள் பணிக்கு வரவில்லை என்று கூறி புலம்பெயர்ந்த பண்டிட்கள் அராசங்கத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எங்களுக்கு தொடந்து கொலை மிரட்டல் வந்துகொண்டு இருக்கிறது. சமீபத்தில் கடந்த புதன் கிழமையும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் பணி செய்யும் இடத்திற்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என எங்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அரசின் பாதுகாப்பு கொள்கை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று காஷ்மீரி பண்டிட்கள் தெரிவித்துள்ளனர்.

"பணி செய்யும் இடங்களில் தங்களின் உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதாலேயே காஷ்மீரி பண்டிட்கள் வேலைக்கு செல்லாமல் போராடி வருகின்றனர். பள்ளாத்தாக்கு பகுதியில் சிறுபான்மையினர் சமூகத்தினரை குறிவைத்து கொலை செய்யும் சம்பவம் அதிகரித்த பின்னர் தான் நாங்கள் போராட்டம் நடத்தத் தொடங்கினோம். எங்களை பாதுகாப்பான இடங்களில் பணியமர்த்தும் படி நாங்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைக்கிறோம்" என்று போராட்டங்களில் பங்கெடுத்து வரும் ரோஹித் என்ற காஷ்மீரி பண்டிட் தெரித்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் முதல் காஷ்மீரில், தீவிரவாதிகள் காஷ்மீரி பண்டிட் களை குறிவைத்து தாக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x