Published : 26 Dec 2022 11:27 AM
Last Updated : 26 Dec 2022 11:27 AM

அவர்கள் பல வாக்குறுதிகளைத் தந்தார்கள். ஆனால்... - ஆம் ஆத்மியை விமர்சித்த அமித் ஷா

அமித் ஷா | கோப்புப் படம்.

சூரத்: "தேர்தலின் போது குஜராத்திற்கு புதிய கட்சிகள் வந்தன. அவர்கள் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பல வாக்குறுதிகளைத் தந்தார்கள்.ஆனால், தேர்தல் முடிவு நமக்கு வரலாற்று வெற்றியைத் தந்துள்ளது" என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆம் ஆத்மி கட்சியை விமர்சித்துள்ளார்.

குஜராத் மாநிலம், சூரத் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா காணொளி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,"தேர்தலின் போது பல புதிய கட்சிகள் குஜராத்திற்கு வந்தன. அவர்கள் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, வாக்குறுதிகள் பலவற்றையும் வழங்கினர். ஆனால், தேர்தல் முடிகள் அவர்கள் அனைவரையும் காணாமல் போகச்செய்துள்ளது.

இந்த வரலாற்று வெற்றி, குஜராத் எப்போதுமே பாஜவின் வலிமையான கோட்டை என்பதை நாட்டிற்கு உணர்த்தியுள்ளது. இந்த வெற்றி அடுத்தடுத்து வர இருக்கும் பிற மாநில தேர்தலுக்கும், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குமான உந்துசக்தியாக இருக்கும்.

நாட்டிலும், குஜராத்திலும் பிரதமர் மோடிக்கு இருக்கும் நல்ல பெயரே இந்த வெற்றிகளுக்கு காரணம். இவ்வாறு அமித் ஷா பேசினார்.

தொடர்ந்து, தேர்தலில் பெற்ற பெரும் வெற்றிக்காக குஜராத் மாநில பாஜக தலைவர் சிஆர் பாடீலையும், நிர்வாகிகள், தொண்டர்களையும் பாராட்டினார். முன்னதாக, 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 156 இடங்களைக் கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வென்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது. தீவிர பிரச்சாரம், பல்வேறு வகையான வாக்குறுதிகள் என குஜராத்தில் புதிதாக களமிறங்கிய ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x