Published : 26 Dec 2022 05:59 AM
Last Updated : 26 Dec 2022 05:59 AM
புதுடெல்லி: சீனாவில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கரோனாவின் ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸால் இந்தியா பெரிய அளவில் பாதிக்கப்படாது என்று மத்திய அரசின் சிசிஎம்பி ஆய்வு மையத்தின் தலைவர் வினய் கே.நந்திகூரி தெரிவித்துள்ளார்.
மத்திய அறிவியல், தொழில் துறையின் கீழ் சிஎஸ்ஐஆர் அமைப்பு செயல்படுகிறது. இதன் கீழ் 38 ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் ஹைதராபாத்தில் உள்ள உயிர்மம், மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையமும் (சிசிஎம்பி) ஒன்றாகும். இந்த ஆய்வு மையத்தின் தலைவர் வினய் கே.நந்திகூரி, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்திய மக்கள் பல்வேறு வகையான வைரஸ்களை எதிர்கொண்டுள்ளனர். இதன் காரணமாக இந்தியர்களுக்கு ‘ஹெர்டு இம்யூனிட்டி' என்ற மக்கள் பெருந்தொற்று தடுப்பாற்றல் உருவாகி இருக்கிறது. இதன் காரணமாகவே கரோனாவின் டெல்டா வைரஸ் பரவல் காலத்திலும்கூட இந்தியாவில் மோசமான விளைவுகள் ஏற்படவில்லை.
நாடு முழுவதும் 90 சதவீதம் பேருக்கு இரு தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் விளைவாக டெல்டாவுக்கு பிறகு ஒமிக்ரான் வைரஸால் ஏற்பட்ட 3-வது கரோனா அலையில் இந்தியாவில் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை.
சீனாவில் தற்போது ஒமிக்ரான் பி.எப்.7 என்ற வைரஸ் பரவி பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது.
அந்த நாட்டில் கரோனா வைரஸை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பொதுமக்கள் வீடுகளில் முடக்கப்பட்டனர். இதன் காரணமாக சீனர்களுக்கு ஹெர்டு இம்யூனிட்டி உருவாகவில்லை. தற்போது உருமாறிய கரோனா வைரஸால் அந்த நாடு பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்தியாவில் பெரும்பாலானோருக்கு எதிர்ப்பு சக்தி (ஹெர்டு இம்யூனிட்டி) ஏற்பட்டுள்ளதால் ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸால் பெரிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை.
எனினும் நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தியாவில் கரோனா அலை ஏற்பட்டால்கூட அதை சமாளிக்கும் திறன் உள்ளது. போதிய சுகாதார கட்டமைப்புகள் இருப்பதால் கரோனா பரவல், பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் தலைவர் ரன்தீப் குலேரியா கூறியதாவது:
சீனாவில் கரோனாவை கட்டுப்படுத்த அடிக்கடி ஊரடங்கு அமல்செய்யப்பட்டது. சீன மக்கள் வீடுகளில் முடங்கியதால் அவர்களுக்கு ஹெர்ட் இம்யூனிட்டி உருவாகவில்லை.
இதன் காரணமாக இப்போது சீனாவில் பரவும் ஒமிக்ரான் பி.எப்.7வைரஸால் அந்த நாட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக முதியவர்களின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
சீனாவில் எந்த வகையான கரோனா வைரஸ் பரவி வருகிறது என்பது குறித்த உண்மையான தகவலை அந்த நாட்டு அரசு வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்போதைய நிலையில் சீனாவில் காட்டுத் தீயை போல கரோனா வைரஸ் பரவுகிறது.
ஜப்பான், தென்கொரியாவில் ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸ் பரவினாலும் அந்த நாடுகளிலும் பெரிய பாதிப்புகள் இல்லை. உயிரிழப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.
எனவே இந்தியாவில் ஒமிக்ரான் பி.எப். 7 வைரஸ் பரவினாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது. என்னைப் பொறுத்தவரை கரோனா அச்சுறுத்தல் ஓயவில்லை. பொதுமக்கள் எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டும். முகக்கவசம் அணிவது, கைகளை கழுவுவது, தனிநபர் இடைவெளியைப் பின்பற்றுவதை தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...