Published : 26 Dec 2022 07:28 AM
Last Updated : 26 Dec 2022 07:28 AM

மது அருந்துபவர்களுக்கு பெண்களை திருமணம் செய்து கொடுக்க வேண்டாம்: மத்திய அமைச்சர் உருக்கமான வேண்டுகோள்

கவுசல் கிஷோர்

சுல்தான்பூர்: ‘‘மது அருந்துபவர்களுக்கு யாரும் தங்கள் மகள்களையோ, சகோதரிகளையோ திருமணம் செய்து கொடுக்க வேண்டாம்’’ என மத்திய அமைச்சர் கவுசல் கிஷோர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தர பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள லம்புவா சட்டப்பேரவை தொகுதியில் போதை பழக்கத்தில் இருந்து மீட்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணையமைச்சர் கவுசல் கிஷோர் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நான் எம்.பி.யாக இருந்தேன். என் மனைவி எம்.எல்.ஏ.,வாக இருந்தார். எனது மகன் ஆகாஷ் கிஷோர் அவனது நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பழக்கத்துக்கு அடிமையானான். அவனை போதைப்பழக்கத்தில் இருந்து விடுபடும் மையத்தில் சேர்த்தோம். குடிப்பழக்கத்தை கைவிடுவான் என்ற நம்பிக்கையில் அவனுக்கு 6 மாதம் கழித்து திருமணம் செய்து வைத்தோம். ஆனால் அதன் பிறகும் மது குடிக்க ஆரம்பித்தான். அந்தப் பழக்கம் அவனை மரணத்தில் கொண்டுவிட்டது. 2 ஆண்டுகளுக்கு முன்பு என் மகன் ஆகாஷ் இறந்தபோது, எனது பேரனுக்கு 2 வயது.

எனது மகனை என்னால் காப்பாற்ற முடியவில்லை. எனது மருமகள் விதவையானார். இதுபோன்ற சோகத்தில் இருந்து நீங்கள் உங்கள் மகள்கள் மற்றும் சகோதரிகளை காப்பாற்றுங்கள். மதுவுக்கு அடிமையானவர்களுக்கு ஆயுள் குறைவு. குடிகார அதிகாரி மாப்பிள்ளையை விட, குடிப்பழக்கம் இல்லாத தொழிலாளி சிறந்த மாப்பிள்ளையாக இருப்பார். எனவே, உங்கள் வீட்டு பெண்களை மது குடிப்பவர்களுக்கு திருமணம் செய்துகொடுக்க வேண்டாம் என வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x