Published : 25 Dec 2022 03:44 AM
Last Updated : 25 Dec 2022 03:44 AM
புதுடெல்லி: வெளிநாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அண்டை நாடான சீனாவில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. அங்கு தினசரி கரோனா பாதிப்பு 3.7 கோடியைத் தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது உலக அளவில் மிக அதிகமான பாதிப்பாகும். இதுதவிர, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, "சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள், கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழைக் கொண்டுவர வேண்டும். அங்கிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டாலோ அவர்கள் தனிமைப்படுத் தப்படுவர்’’ என்றார்.
சீனாவில் அதிகமாகப் பரவும் ஒமிக்ரான் பி.எஃப்-7 வகை கரோனா தொற்று, இந்தியாவில் சிலருக்கு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் கரோனா இரண்டாம் அலை ஏற்பட்டபோது, ஆக்ஸிஜன் பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது. வரும் நாட்களில், இந்தியாவிலும் கரோனா அவசரநிலை ஏற்பட்டால், அதை எதிர்கொள்ள புதிதாக 6 அம்ச அறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது.
இது தொடர்பாக மாநிலங்களுக்கு, மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலர் மனோகர் அக்னானி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாட்டில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும், எதிர்காலத்தில் சவால்கள் ஏற்பட்டால், அவற்றை எதிர்கொள்ளத் தேவையான மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருப்பதும், பராமரிப்பதும் மிகவும் முக்கியம். மருத்துவமனைகளுக்கான பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை தயார் நிலையில் வைத்திருப்பதுடன், அடிக்கடி பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.
அதேபோல, திரவ மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகத்துக்குத் தயாராக இருப்பதுடன், அதை மீண்டும் நிரப்பவும் தயாராக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். அவற்றைப் பராமரித்து, மீண்டும் நிரப்பும் வசதிகளையும் வலுவான நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT