Published : 24 Dec 2022 06:48 PM
Last Updated : 24 Dec 2022 06:48 PM
புதுடெல்லி: மக்களின் கவனத்தை திசை திருப்பவே இந்து - முஸ்லிம் விவகாரத்தை பாஜக எழுப்புவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் ராகுல் காந்தி பேச்சு: நூறு நாட்களுக்கும் மேலாக ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை இன்று டெல்லி வந்தடைந்தது. டெல்லி செங்கோட்டை பகுதியில் இன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: "நாட்டில் தற்போது இருப்பது நரேந்திர மோடி அரசு அல்ல. இது அம்பானி - அதானி அரசு. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கான அரசு அல்ல. இந்தியாவில் மக்கள் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். அதற்கு இதுவரை மத்திய அரசு தீர்வு காணவில்லை.
நாட்டின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கிலேயே இந்து - முஸ்லிம் விவகாரம் எழுப்பப்படுகிறது. பட்டம் படித்த இளைஞர்கள் பலர் இன்று பகோடா விற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கவலை இல்லை.
நாடு முழுவதும் வெறுப்பு பரப்பப்பட்டு வருகிறது. வெறுப்புs சந்தையில் நான் அன்பின் கடையை திறக்கிறேன். நான் மேற்கொண்ட இந்த இந்திய ஒற்றுமை யாத்திரையில் எங்களோடு நாய்கூட வந்தது. ஆனால், ஒருவரும் நாயை கொல்லவில்லை. பசு, எருது, பன்றி என பல்வேறு விலங்குகள் வந்தன. இந்த யாத்திரை இந்தியாவின் யாத்திரையாக இருக்கிறது. இங்கே வெறுப்புக்கு இடமே இல்லை. வன்முறைக்கு இடமே இல்லை.
நான் 2004-ல் அரசியலுக்கு வந்தபோது மத்தியில் எங்கள் அரசு இருந்தது. ஊடகங்கள் நாள் முழுவதும் என் புகழ்வதை வழக்கமாகக் கொண்டிருந்தன. ஒருமுறை, உத்தரப் பிரதேசத்தின் பட்டா பர்சுவால் என்ற இடத்துக்குச் சென்று அங்குள்ள விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்தேன். உடனே அவர்கள் எனக்கு எதிராக திரும்பிவிட்டார்கள்" என்று அவர் பேசினார்.
மல்லிகார்ஜுன கார்கே பேச்சு: இந்த நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எங்கேயும் கரோனா இல்லை. யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை. பிரதமர் நரேந்திர மோடி கூட முகக்கவசம் அணிவதில்லை. ஆனால், இந்திய ஒற்றுமை யாத்திரையால் கரோனா பரவிவிடும் எனக் கூறி மக்களை அச்சுறுத்தப் பார்க்கிறார்கள். உண்மையில் அவர்கள் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு கிடைத்துள்ள வரவேற்பால் அச்சமடைந்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே, கரோனாவை காரணம் காட்டி யாத்திரையை நிறுத்த முயல்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT