Published : 24 Dec 2022 02:00 PM
Last Updated : 24 Dec 2022 02:00 PM

“அனுராக் தாக்கூர் பெரிய அமைச்சர்... நாங்கள் சிறிய மனிதர்கள்...” - ப.சிதம்பரம்

புதுடெல்லி: இந்திய ஒற்றுமை யாத்திரையை விமர்சித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், “அவர் பெரிய அமைச்சர்; நாங்கள் சிறிய மனிதர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற யாத்திரை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை இன்று தலைநகர் டெல்லிக்குள் நுழைந்தது. அப்போது, ஏராளமானோர் யாத்திரையில் கலந்து கொண்டனர். கரோனா விதிகளைப் பின்பற்றி யாத்திரையை மேற்கொள்ளுமாறும், இல்லாவிட்டால் யாத்திரையை நிறுத்துமாறும் ராகுல் காந்திக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதி இருந்தார். எனினும், இன்றைய யாத்திரையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அனுராக் தாக்கூர் கண்டனம்: கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றாமல் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொள்ளப்படுவதற்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கண்டனம் தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சீனா, தென் கொரியா, ஜப்பான் நாடுகளில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறது.

கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டிய காலம் இது. இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்குவுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரை சந்தித்த ராகுல் காந்தியோ மற்ற காங்கிரஸ் தலைவர்களோ கரோனா பரிசோதனை மேற்கொண்டார்களா அல்லது தங்களை தனிமைப்படுத்திக் கொண்டார்களா?

ஊழல்வாதிகளை ஒன்று சேர்ப்பதற்கான யாத்திரை இது. அவர்கள்(காங்கிரஸ் கட்சியினர்) ஒரு குடும்பத்தின் நலனை மட்டுமே சிந்திப்பதற்குப் பதில், நாட்டின் நலன் குறித்து சிந்திக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார். மேலும், “இவர்களை சுட்டுத்தள்ள வேண்டும்” என்றும் அவர் காட்டமாக கூறியிருந்தார்.

ப.சிதம்பரம் பதில்: அனுராக் தாக்கூரின் விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், "அனுராக் தாக்கூர் அவ்வாறு விமர்சித்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு மிகப் பெரிய ஆதரவு கிடைத்திருக்கிறது. ஏராளமானோர் இதில் இணைந்திருக்கிறார்கள். அதனால், அனுராக் தாக்கூர் அவ்வாறு கூறி இருக்கிறார். அவர் பெரிய அமைச்சர். நாங்கள் சிறிய மனிதர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x