Published : 23 Dec 2022 09:17 PM
Last Updated : 23 Dec 2022 09:17 PM
புதுடெல்லி: "பரிசோதனை, நோய் கண்டறிதல், மருத்துவம், விதிமுறைகளைப் பின்பற்றல் போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். இதன் மூலம் எந்த புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு இருப்பினும் பரவாமல் தடுக்க முடியும்" என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, காணொலி காட்சி மூலம், புதுச்சேரி மற்றும் திரிபுரா மாநில முதல்வர்கள், புதுடெல்லி துணை முதல்வர், மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள், முதன்மை செயலாளர்கள், கூடுதல் தலைமைச் செயலர்கள் மற்றும் தகவல் ஆணையர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர், கரோனா பெருந்தொற்றைத் தடுப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும் அவர், சீனா, ஜப்பான், பிரேசில் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கடந்த சில வாரங்களாக கரோனா பெருந்தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
பிரதமர் தலைமையில் நேற்று (டிச.22) நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில், கரோனா பெருந்தொற்றை எதிர்நோக்கும் வகையில், மாநிலங்கள், முனைப்புடன் செயல்பட்டு அனைத்து தயார் நிலைகளில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா தொற்று இருக்கும் பட்சத்தில் தேவையான அனைத்து கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
பரிசோதனை, நோய் கண்டறிதல், மருத்துவம், விதிமுறைகளைப் பின்பற்றல் போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். இதன் மூலம் எந்த புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு இருப்பினும் பரவாமல் தடுக்க முடியும். பரிசோதனை நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், நித்தி ஆயோகின் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment