Published : 23 Dec 2022 12:30 PM
Last Updated : 23 Dec 2022 12:30 PM
புதுடெல்லி: கரோனா தொற்றுக்கு மூக்கு வழியாக செலுத்தும் இரண்டு சொட்டு தடுப்பு மருந்தினை தடுப்பு மருந்து திட்டத்தில் சேர்க்க மத்திய அரசு வெள்ளிக்கிழமை அனுமதி அளித்துள்ளது. கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பு மருந்தாக மூக்குவழி தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளலாம் என அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்டை நாடான சீனாவில் மீண்டும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு தினமும் 1 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சீனாவின் கரோனா தாக்கம் இன்னும் இந்தியாவை வந்தடையாத நிலையில் குஜராத் மற்றும் ஒடிசாவில் நான்கு பேருக்கு சீனாவில் பரவி வரும் உருமாறிய ஓமிக்ரான் புதிய வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மத்திய சுகாதார அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. கரோனா தடுப்பூசி நடைமுறையை தீவிரப்படுத்தும் படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுத்தியுள்ளார்.
இந்தநிலையில், கரோனா தடுப்பூசியுடன், பூஸ்டர் தடுப்பு மருந்தாக மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு இன்று அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம், இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் இரண்டு தடுப்பூசிகளுடன், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு சொட்டுகள் இன்கோவாக் மூக்குவழி செலுத்தும் தடுப்பு மருந்தும் சேர்க்கப்பட்டுள்ளது.
பாரத் பயோடெக் உருவாக்கியுள்ள இந்தத்தடுப்பு மருந்து தற்போது தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும். கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் இந்த மூக்குவழி தடுப்பு மருந்தினை பூஸ்டர் டோஸாக எடுத்துக்கொள்ளலாம் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில். பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த பண்டிகைக் காலங்களில் கரோனா நடைமுறைகளை கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உலகில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகள் தொர்பாக, மாநில, யூனியன் பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை மாலை 3 மணியளவில் காணொலி வழியாக நடைபெற இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT