Published : 23 Dec 2022 06:25 AM
Last Updated : 23 Dec 2022 06:25 AM
புதுடெல்லி: நாட்டின் கரோனா நிலவரம், சுகாதார உள்கட்டமைப்பு, சுகாதார தயார்நிலை, தடுப்பூசி திட்டம், புதிய கரோனா வைரஸ்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று காணொலி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் அதிவேகமாக பரவுவது குறித்து சுகாதாரத் துறை செயலாளர், நிதி ஆயோக் மூத்த அதிகாரிகள் சார்பில் வீடியோ வாயிலாக கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.
சர்வதேச அளவில் தினசரி கரோனா தொற்று 5.9 லட்சமாக இருப்பதாகவும் இந்தியாவில் தினசரி தொற்று 153 ஆக இருப்பதாகவும் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
கடந்த 6 மாதங்களாக கரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வருவதாக அதிகாரிகள் கூறியபோது, பிரதமர் நரேந்திர மோடி குறுக்கிட்டுப் பேசினார். அவர் கூறியதாவது:
கரோனா பெருந்தொற்று காலம் இன்னும் முடிவடையவில்லை. தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும்.
கரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள், சுகாதார ஊழியர்களின் தயார் நிலையை உறுதிப்படுத்த வேண்டும். ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இதுதொடர்பாக ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு முழுவதும் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக கரோனா மரபணு பரிசோதனைகளை விரைவுபடுத்த வேண்டும். அனைத்து கரோனாநோயாளிகளின் மாதிரிகளை அந்தந்த மாநில அரசுகள் இன்சாகாக், ஐ.ஜி.எஸ்.எல். ஆய்வகங்களுக்கு அனுப்ப வேண்டும்.
இதன்மூலம் புதிய கரோனாவைரஸ்களை குறித்த நேரத்தில்கண்டறிந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளை அடுத்தடுத்து கொண்டாட உள்ளோம். இந்த நேரத்தில் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியமாகும். அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். தனிநபர் இடைவெளியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
கரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை மாநில அரசுகள்தீவிரப்படுத்த வேண்டும். பூஸ்டர்தடுப்பூசியில் மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மருந்துகள், தடுப்பூசிகள், மருத்துவமனை படுக்கை வசதிகள் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மருந்துகளின் இருப்பு மற்றும் விலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தன்னலம் கருதாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர்அனுராக் தாக்குர், சுகாதாரத் துறைஇணையமைச்சர் பாரதி பிரவீண் பவார், பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே. மிஸ்ரா, நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பரமேஸ்வரன், நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பிரதமரின் அறிவுரைகளை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. உத்தர பிரதேசத்தில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அந்தமாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்டுக் கொண்டுள்ளார். கர்நாடகாவில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை உத்தராகண்ட், ஹரியாணா அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன.
ஆந்திரா, ஒடிசா, பஞ்சாப், டெல்லி மாநில அரசுகள் சார்பில் நேற்று உயர்நிலை ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. இதில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
மேலும் ஒருவர் பாதிப்பு: இந்தியாவில் ஏற்கெனவே 4 பேருக்கு ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் இருந்து குஜராத்தின் பாவ் நகருக்கு திரும்பிய தொழிலதிபருக்கு ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அவரது குடும்பத்தினர், அவரோடு தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT