Published : 23 Dec 2022 04:56 AM
Last Updated : 23 Dec 2022 04:56 AM
புதுடெல்லி: சீன எல்லைப் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று முடங்கியது.
மக்களவை நேற்று காலையில் கூடியதும் சபாநாயகர் ஓம் பிர்லா சிலரின் இரங்கல் குறிப்புகளை வாசித்தார். பின்னர் கேள்வி நேரம் தொடங்கியதும், சீன எல்லை பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ், திரிணமூல், சிவசேனா மற்றும் திமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் கேள்வி நேரத்தை நடத்த அனுமதிக்கும்படி சபாநாயகர் கேட்டுக் கொண்டார். இடையூறுசெய்த எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் ‘‘நீங்கள் அவை நடைபெற விரும்பவில்லை. நீங்கள் மக்களுக்கு பதில் அளிக்க வேண்டும்’’ என கூறினார். தொடர் அமளியால், அவையை 12 மணிவரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
அவை மீண்டும் கூடியதும், எதிர்கட்சி உறுப்பினர்கள் ‘‘பிரதமர் அவைக்கு வர வேண்டும். அவர் சர்வாதிகாரி போல் செயல்பட முடியாது. சீன எல்லை பிரச்சினை குறித்து அவையில் விவாதம் நடத்த நாங்கள் விரும்புகிறோம்’’ என்றனர்.
இதற்கு பதில் அளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலத் ஜோஷி, ‘‘குளிர்கால கூட்டம் வெள்ளிக்கிழமையுடன் முடிகிறது. பல முக்கிய விஷயங்கள் குறித்து அவையில் பல விவாதங்கள் நடத்த வேண்டும். ஐ.மு கூட்டணி ஆட்சியில் இருந்தபோதும், உணர்வுபூர்வமான விஷயங்கள் குறித்து அவையில் விரிவாக விவாதிக்கப்படவில்லை. சீன எல்லைப் பிரச்சினை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏற்கெனவே விரிவான விளக்கம் அளித்துவிட்டார். ராணுவமும் அறிக்கை வெளியிட்டது. சீன எல்லைப் பிரச்சினை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுப்பவர்களுக்கு, நாம் எவ்வளவு நிலப் பகுதியை சீனாவிடம் இழந்துள்ளோம் என்பது நன்கு தெரியும். அவையை நடத்த அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்களை கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார்.
உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நேற்று மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு: மாநிலங்களவை நேற்று காலை தொடங்கியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து, சீன எல்லைப் பிரச்சினை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களை இருக்கைக்கு செல்லும்படி அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர்.
மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால் பேசுகையில், ‘‘குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் இருந்து சீன எல்லைப் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், அரசு இந்த விஷயத்தில் பிடிவாதமாக உள்ளது. அதனால் ஒட்டுமொத்த எதிர்கட்சி உறுப்பினர்ளும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்ய முடிவு செய்துள்ளோம்’’ என கூறினார். அதன்பின் எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
முகக்கவசம் அணியுங்கள்: மக்களவை நேற்று காலை தொடங்கியதும், சபாநாயகர் ஓம்பிர்லா அவைக்கு முகக்கவசம் அணிந்தபடி வந்தார். அவையில் அவர் பேசுகையில் கூறியதாவது: சில நாடுகளில் கரோனா தொற்றுமீண்டும் அதிகரித்து வருவதால்,உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கூட்டம் இருக்கும் இடங்களில் முகக்கவசம் அணியும்படியும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றும்படியும் மக்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கரோனா தொற்று காலத்தில் கடந்த அனுபவங்களை மனதில் வைத்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். எம்.பி.க்களுக்கு அவையின் நுழைவு வாயிலில் முகக்கவசம் வழங்கப்படுகிறது. அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கரும், உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். அவர் கூறுகையில், ‘‘நாம், நாட்டு மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அரசுத்துறையினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்தியா கரோனா சவால்களை சமாளித்தது. குறுகிய காலத்தில் 200 கோடி கரோனா தடுப்பூசிகளை போட்டு இந்தியா சாதனை படைத்துள்ளது. தற்போது கரோனா சூழல் மீண்டும் அச்சுறுத்துகிறது. நாம் விழிப்புடன் இருந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.
பிரதமர் நரேந்திரமோடியும், மாநிலங்களவைக்கு முகக்கவசம் அணிந்து வந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT