Published : 21 Dec 2022 03:25 PM
Last Updated : 21 Dec 2022 03:25 PM

கரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை; கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள் - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்

புதுடெல்லி: கரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், இது குறித்த ஆலோசனைக் கூட்டம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை செயலாளர்கள், ஆயுஷ் துறை செயலாளர்கள், மருந்து மற்றும் உயிரிதொழில்நுட்பத் துறை வல்லுநர்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் ராஜிவ் பல், நிதி ஆயோக்(சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால், தொற்றுநோய்களுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் என்.எல். அரோரா, உயிரிதொழில்நுட்ப துறை செயலாளர் ராஜேஷ் கோகலே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "kகரோனா தொற்று பல நாடுகளில் அதிகரித்துள்ளதை அடுத்து வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அதேநேரத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்கான உத்தரவை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நான் பிறப்பித்துள்ளேன். எத்தகைய ஒரு சூழலையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால், "முன்னெச்சரிக்கைக்கான 3வது கரோனா தடுப்பூசியை 27-28 சதவீத மக்களே போட்டுக் கொண்டுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முன்னெச்சரிக்கை தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது கட்டாயம். அதேபோல், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும்போது அனைவரும் முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும்." என கேட்டுக்கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x