Published : 20 Dec 2022 09:34 PM
Last Updated : 20 Dec 2022 09:34 PM
புதுடெல்லி: சீனா உள்ளிட்ட நாடுகளில் கரோனா தொற்று பரவல் குறித்த அச்சம் மீண்டும் ஏற்பட்டுள்ள நிலையில், கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
“ஜப்பான், அமெரிக்கா, கொரியா, பிரேசில் மற்றும் சீனா போன்ற நாடுகளில் திடீரென கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு நோய்த்தொற்று பரிசோதனையை தீவிரப்படுத்துவது அவசியம். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து மரபணு சார்ந்த ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதும் அவசியம்.
இந்த நடவடிக்கை மூலம் புதிய கரோனா திரிபு பாதிப்பு நாட்டில் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ள முடியும். மேலும், அதற்குத் தேவையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும்” என மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா தொற்றில் ஏற்படும் மரபணு சார்ந்த மாறுபாடுகளை கண்டறிய 50-க்கும் மேற்பட்ட ஆய்வகங்களை உள்ளடக்கிய INSACOG அமைப்பு இயங்கி வருகிறது. இந்த ஆய்வகங்கள் கரோனா திரிபு குறித்த விவரங்களை கண்காணிக்கும் பணியை ஆய்வின் ஊடாக செய்து வருகிறது.
கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகள் தினந்தோறும் இந்த ஆய்வகங்களுக்கு அவசியம் அனுப்ப வேண்டும் என மத்திய அரசு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது 3,490 பேர் கரோனா தொற்று பதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா கவலை: சீனாவில் ஏற்பட்டுள்ள கரோனா பரவலின் தீவிரம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் பேசும்போது, “சினாவின் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டால், அங்கு தற்போது ஏற்பட்டுள்ள கரோனா பரவலின் தீவிரம் உலக நாடுகளை கவலையடையச் செய்துள்ளது. கரோனா வைரஸ்கள் உருமாற்றம் அடையக் கூடியவை. எனினும், இதனை சீனா சிறப்பாக கையாளும் என்று நம்புகிறோம். கரோனாவுக்கு எதிரான போரில் சீனா வலுவாக இருக்க வேண்டும் என்பது சீனாவுக்கு மட்டும் நல்லதல்ல, உலக நாடுகளுக்கும் நல்லது” என்றார்.
மூடி மறைக்கிறதா சீனா? - சீனாவில் உள்ள மயானங்களில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்கள் வருவது அதிகரித்துள்ள நிலையில், இது பற்றிய தகவல்களை சீன அரசு கடந்த 2 வாரங்களாக வெளியிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. கடந்த புதன்கிழமை மட்டும் கரோனாவால் உயிரிழந்த 30 பேரின் சடலங்கள் வந்ததாக பெய்ஜிங் மயான ஊழியர் ஒருவர் கூறியுள்ளார். இதேபோல் பெய்ஜிங் நகரில் உள்ள மற்ற மயானங்களிலும் இறந்தவர்களின் உடல்கள் அதிகளவில் வருவதாக அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
டோங்ஜியோ என்ற இடத்தில் உள்ள மயானத்தில் கடந்த புதன்கிழமை 150 உடல்கள் வந்துள்ளன. இவற்றில் 40 கரோனா பாதிப்பு உடல்கள் என அங்குள்ள ஊழியர் ஒருவர் தெரிவித்தார். கரோனா பாதிப்பால் இறந்தவர்களின் உடல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு எரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். ஆனால் கடந்த டிசம்பர் 4-ம் தேதி முதல் கரோனா உயிரிழப்புகளை சீன பதிவு செய்யவில்லை. பெய்ஜிங் நகரில் ஒரே நாளில் ஆயித்துக்கும் மேற்பட்ட கரோனா பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும், கரோனா உயிரிழப்பு ஒன்றுமில்லை என சீன அரசு கடந்த நவம்பர் 23-ம் தேதி தெரிவித்தது.
கரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்துள்ளதால், அறிகுறியற்ற கரோனா பாதிப்பு விவரங்களை தெரிவிப்பதை சீன அரசு கடந்த வாரம் நிறுத்தியது. கரோனா பாதித்து இறந்தவர்களை, வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்கள் எனவும் பலரை வேறு காரணங்களால் இறந்ததாகவும் மருத்துவமனைகள் வகைப்படுத்துவதாக பெய்ஜிங் மயான ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
கரோனா உயிரிழப்பு அதிகரிப்புகுறித்து சீன சுகாதார ஆணையத்திடம் கேட்டபோது, எந்த பதிலும்அளிக்கவில்லை. கடந்த 2019-ம் ஆண்டு முதல் சீனாவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,235 என மட்டுமே சீன அரசு கூறியுள்ளது. கரோனா உயிரிழப்பு விவரங்களை சீனா மூடி மறைப்பதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT