Published : 19 Dec 2022 12:40 PM
Last Updated : 19 Dec 2022 12:40 PM
பெலகவி: கர்நாடக சட்டப்பேரவையில் வீர சாவர்க்கர் படம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது.
பெலகவி சட்டப்பேரவை: கர்நாடக அரசுக்கு இரண்டு இடங்களில் சட்டப்பேரவை உள்ளது. ஒன்று தலைநகர் பெங்களூருவில் இருக்கின்றது. மற்றொன்று மகாராஷ்ட்ராவை ஒட்டிய நகரான பெலகவியில் இருக்கின்றது. பெலகவி மாவட்டத்திற்கு மகாராஷ்ட்டிரா நீண்டகாலமாக உரிமை கோரி வருவதால், அதை முறியடிக்கும் நோக்கில் கடந்த 2012ல் பெலகவியில் சட்டப்பேரவை கட்டிடம் அமைக்கப்பட்டது.
குளிர்கால கூட்டத் தொடர்: கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், முதல் நாளே அம்மாநில எதிர்க்கட்சிகள் அவைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கின. இதற்குக் காரணம், பெலகவி சட்டப்பேரவை வளாகத்தில் விடுதலைக்காகப் போராடிய தலைவர்களில் ஒருவரான வீர சாவர்க்கரின் படம் இன்று திறக்கப்பட்டதுதான். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை வளாகத்தின் முன்பாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமைய்யா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சித்தராமைய்யா பேட்டி: வீர சாவர்க்கர் படம் திறக்கப்பட்டதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கிலேயே அரசு இதை செய்திருக்கிறது. மாநில அரசு மீது நாங்கள் ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறோம். இதுபற்றி விவாதத்தை தவிர்க்கவே அரசு இவ்வாறு செயல்பட்டுள்ளது. இதை அரசின் முடிவுக்கு எதிரான போராட்டம் என நான் சொல்ல மாட்டேன். வீர சாவர்க்கரின் படத்தை திறந்த அரசு, அனைத்து தேசிய தலைவர்கள், சமூக சீர்திருத்தவாதிகளின் படங்களையும் திறக்க வேண்டும் என்பதையே நாங்கள் வலியுறுத்துகிறோம்.
பாஜக எதிர்ப்பு: சுதந்திரத்திற்காக போராடிய கட்சி காங்கிரஸ் என அக்கட்சி உரிமை கோருகிறது. ஆனால், அந்த காங்கிரஸ் வேறு; தற்போது உள்ள காங்கிரஸ் வேறு. இரண்டும் ஒன்றல்ல. தற்போது இருப்பது போலி. சட்டப்பேரவை வளாகத்தில் வீர சாவர்க்கரின் படத்தை திறக்காமல் தாவூத் இப்ராஹிமின்( பாகிஸ்தானில் பதுங்கி உள்ள தீவிரவாதி ) படத்தையா திறக்க முடியும்? என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கேள்வி எழுப்பி உள்ளார்.
சபாநாயகருக்குக் கடிதம்: இதனிடையே, சட்டப்பேரவையில் வால்மீகி, பசவன்னா, கணக தாசா, பி.ஆர். அம்பேத்கர், சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்டோரின் படங்களையும் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சித்தராமைய்யா, சபாநாயகருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT