Published : 19 Dec 2022 12:00 PM
Last Updated : 19 Dec 2022 12:00 PM
ஷில்லாங்: மேகாலயா காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும் முக்கிய தலைவருமான அம்பாரீன் லிங்தோ கட்சியிலிருந்து விலகினார். அவருடன் இன்னொரு எம்எல்ஏவும் விலகினார். லிங்தோ ஆளும் என்பிபி கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு முன் பாதியிலேயே மேகாலயா சட்டப்பேரவைக்கு தேர்தல் வரவிருக்கிறது இந்நிலையில் அம்பாரீன் லிங்தோ கட்சியிலிருந்து விலகியுள்ளார். ராஜினாமா கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள அவர் அதனை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை டேக் செய்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் லிங்தோ நான் என் வாழ்நாளின் பெரும்பகுதியை காங்கிரஸ் தொண்டனாக கழித்துள்ளேன். ஆனால் சமீப காலமாக கட்சியில் நடக்கும் விஷயங்களைப் பார்க்கும்போது அது தனது இலக்கினை இழந்துவிட்டதாகத் தோன்றுகிறது. கட்சியும் அதன் தலைமையும் இதன் நிமித்தமாக உள்ளார்ந்து சுய பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் அதில் கட்சி தோற்றுவிட்டது. அதனால் நான் கட்சியில் இருந்து விலகுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தேர்தலை சந்திக்கவுள்ள மேகாலயாவில் கடந்த மாதம் ஆளும் என்பிபி கட்சியிலிருந்து 2 அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஒருவரும் ராஜினாமா செய்தனர். மூவரும் பாஜகவில் இணைய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் மேகாலயா காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும் முக்கிய தலைவருமான அம்பாரீன் லிங்தோ கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
முன்னதாக நேற்று மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் வடகிழக்கு கவுன்சிலின் (என்இசி) பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தேசத்தின் வளர்ச்சிக்கான தடைகளைத் தகர்த்துள்ளோம். அந்த வகையில், வடகிழக்கு மாநிலங்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் அனைத்து விவகாரங்களுக்கும் மத்திய அரசு தீர்வு கண்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இந்நிலையில் பிரதமர் வந்து சென்ற மறுநாள் மேகாலயா அரசியலில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT