Published : 19 Dec 2022 05:08 AM
Last Updated : 19 Dec 2022 05:08 AM
புதுடெல்லி: கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2020 வரை அயர்லாந்து பிரதமராக இருந்தவர் லியோ வரத்கர் (43). இவரது தந்தை இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர். தாய் அயர்லாந்தைச் சேர்ந்த செவிலியர். அயர்லாந்தில் மருத்துவர் பட்டம் பெற்ற லியோ, சிறிது காலம் மருத்துவராக பணியாற்றினார். அப்போது அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டார். கடந்த 2007-ம் ஆண்டில் மேற்கு டப்லின் நகரில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.
அயர்லாந்தில் 2015-ம் ஆண்டு தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி அளிப்பதற்கு முன்பாகவே, இவர் தன்னை தன்பாலினத்தவர் என வெளிப்படையாக கூறினார். கடந்த 2017-ம்ஆண்டு தனது 38-வது வயதில் இவர் அயர்லாந்து பிரதமரானார். கரோனா தொற்று காலத்தில் மருத்துவராகவும் பணியாற்றினார்.
கடந்த 2 ஆண்டுகளாக மைக்கேல் மார்டின் என்பவர் அயர்லாந்து பிரதமராக இருந்து வந்தார். இந்நிலையில் கூட்டணி ஆட்சி ஒப்பந்தப்படி அயர்லாந்து நாடாளுமன்றத்தில் நடந்த தேர்தலில் லியோ வரத்கரை மீண்டும் பிரதமராக எம்.பி.க்கள்தேர்வு செய்தனர். அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி,‘‘லியோ வரத்கருக்கு வாழ்த்துகள்.
இந்தியா - அயர்லாந்து இடையேயான வரலாற்று சிறப்புமிக்க உறவுகள், பலவித ஒத்துழைப்பை பகிர்ந்து கொள்கின்றன. நமது துடிப்பான பொருளாதாரம், முழு ஆற்றலுடன் செயல்பட அயர்லாந்துடன் இணைந்து செயல்படுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT