Published : 19 Dec 2022 05:42 AM
Last Updated : 19 Dec 2022 05:42 AM
புல்பானி: ஒடிசா மாநிலம் புல்பானி நகரைச் சேர்ந்த மூதாட்டி துலா பெஹேரா (70). இவரது கணவர் பிரஃபுல்லா பெஹெரா. மாற்றுத்திறனாளியான இவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். ஆரம்பத்தில் புல்பானி நகரில் வீடு, வீடாக யாசகம் செய்து வந்த இவர், கணவர் இறப்புக்குப் பின்பு, புல்பானி நகரில் உள்ள ஜெகந்நாதர் கோயில், சாய் கோயில் மற்றும் இதர கோயில்களின் வாசலில் அமர்ந்து யாசகம் கேட்டு வந்தார். காந்தமால் மாவட்டத்தில் கைவிடப்பட்ட பெண் குழந்தை ஒன்றையும் இவர் தத்தெடுத்துள்ளார். கோயில்களில் யாசகம் மூலம் கிடைக்கும் பணத்தில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
பகவான் ஜெகந்நாதரின் தீவிர பக்தையான துலா பெஹேராவுக்கு, ஜெகந்நாதர் கோயிலுக்கு நன்கொடை அளிக்க வேண்டும் என்பது நீண்ட கால ஆசை. இதற்காக யாசகமாக கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கி அதில் சேமித்து வந்துள்ளார்.
சமீபத்தில் அவரது சேமிப்பு கணக்கில் பணம் ரூ.1 லட்சத்தை எட்டிவிட்டதாக தபால் அலுவலக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்தப் பணத்தை புல்பானி ஜெகந்நாதர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்க துலா பெஹேரா முடிவு செய்தார்.
இதையடுத்து தனு சங்கராந்திநாளான கடந்த வெள்ளிக்கிழமையன்று, துலா பெஹேராவிடமிருந்து ரூ.1 லட்சம் நன்கொடையை கோயில் நிர்வாகத்தினர் பெற்றுக் கொண்டனர். இது குறித்து ஜெகந்நாதர் கோயில் நிர்வாக குழு தலைவர் சுனாசிர் மொகந்தி கூறுகையில், ‘‘துலா பெஹேரா அளித்தநன்கொடை கோயில் உள்கட்டமைப்பை மேம்படுத்த பயன்படுத்தப்படும். அவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், துலா பெஹேராவுக்கு வாழ்நாள் முழுவதும் பிரசாதம் வழங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.
நன்கொடை அளித்தது குறித்து துலா பெஹேரா கூறுகையில், ‘‘பல ஆண்டுகளாக யாசகம் செய்து பணத்தை சேமித்தேன். எனக்கு பெற்றோரும் இல்லை, குழந்தைகளும் இல்லை. நான் எனது வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருந்தாலும், எனக்கு பணம் தேவையில்லை. பகவான் ஜெகந்நாதருக்கு செய்யும் சேவை மூலம், இந்த பூமியில் எனது வாழ்வின் நோக்கம் நிறைவேறிவிட்டது. என்னை இந்த அளவுக்கு கொண்டுவந்ததே பகவான் ஜெகந்நாதர்தான். அவர் என்னை கவனித்துக் கொள்வார்’’ என்றார்.
ஜெகந்நாதருக்கு செய்யும் சேவை மூலம், இந்த பூமியில் எனது வாழ்வின் நோக்கம் நிறைவேறியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT