

மன்சிராலா: தெலங்கானா மாநிலம், மன்சி ராலா மாவட்டம், பூடிபள்ளி கிராமத்தில் ஒரு வீட்டில் வெள்ளிக் கிழமை இரவு 6 பேர் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணிக்கு வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கும், போலீ ஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைப்பதற்குள், வீட்டில் இருந்த சிவய்யா (50), இவரது மனைவி பத்மா (45), உறவினர் சாந்தைய்யா (50), பத்மாவின் அக்கா மகள் மவுனிகா (26) மற்றும் இவரது மகள்களான ஹிமபிந்து (4), ஸ்வீட்டி (2) ஆகிய 6 பேரும் உயிரிழந்தனர். இறந்து போன பத்மாவின் அக்கா மகள் மவுனிகா தனது பிள்ளைகளுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தான் பத்மா வீட்டிற்கு வந்துள்ளார். இவர் என்ன பிரச்சினைக்காக வந்தார் ? இவரது கணவருடன் பிரச்சினையா என்ற கோணத்தில் போலீஸார் விசாரிக்கின்றனர்.
மேலும், சிவய்யா குடும்பத் துக்கும், சாந்தைய்யா குடும்பத் துக்கும் தகராறு உள்ளதால், சாந்தய்யா குடும்பத்தினர் செய்த சதி செயலா என்றும் விசாரணை நடக்கிறது. மேலும், சம்பவம் நடந்த வீட்டின் அருகே இரவு ஒரு ஆட்டோ 2 அல்லது 3 முறை சுற்றி, சுற்றி வந்துள்ளது. மேலும், வீட்டின் அருகே 2 காலி பெட்ரோல் கேன்கள் வீசி விட்டு சென்றிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.