Published : 17 Dec 2022 04:03 PM
Last Updated : 17 Dec 2022 04:03 PM

இந்திய ராணுவத்திடம் ராகுல் காந்தி மன்னிப்புக் கோர வேண்டும்: யோகி ஆதித்யநாத் ஆவேசம்

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

லக்னோ: இந்திய - சீன எல்லை மோதல் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இந்திய ராணுவத்திடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.

இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அதன் 100-வது நாளை முன்னிட்டு நேற்று, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் "இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்க சீனா தயாராகி வருகிறது. ஆனால், இதனை நமது அரசு ஏற்க மறுக்கிறது. இந்த உண்மையை அரசு மறைத்து வருகிறது" என்று கூறியிருந்தார்.

இதற்கு பாஜக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒருபடி மேலே சென்று ராகுல் காந்தி தனது கருத்துக்காக மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக யோகி ஆதித்யநாத் கூறும்போது, "ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். அக்கட்சியின் தலைவராகவும் இருந்திருக்கிறார். ஆனால், அவ்வப்போது அவரது கருத்துகள் சிறுபிள்ளைத் தனமாக உள்ளது.

இப்போது அவர் பேசியுள்ள விதம் இந்திய ராணுவத்தை அவமதிக்கும் செயல். இந்த உலகமே இந்திய ராணுவத்தின் பராக்கிரமத்தை வியந்து பேசுகையில் ராகுல் காந்தி அதன் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்குகிறார். இது முதன்முறை அல்ல. இதற்கு முன்னரும் ராகுல் காந்தி இவ்வாறாக இந்திய ராணுவத்தை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார். டோக்லாமில் சீனப் படைகள் ஊடுருவியபோதும் ராகுல் காந்தி இவ்வாறு பேசியிருக்கிறார். டோக்லாம் ஊடுருவலின்போது ராகுல் காந்தி சீன தூதரை சந்தித்தார். அது எதற்காக சந்தித்தார் என்பது இதுவரை தெரியவில்லை. அவர் அப்போது செய்தது தேச விரோத செயல்.

இந்திய தேசத்தின் முன்னால் எப்போதெல்லாம் பெரிய சவால் இருக்கிறதோ, அப்போதெல்லாம் ராகுல் காந்தி தனது உண்மை முகத்தை தன்மையை காட்டுகிறார். எந்த ஒரு இந்தியரும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார். ஆகையால் தனது பேச்சுக்காக ராகுல் காந்தி இந்திய ராணுவத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

முன்னதாக, பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, “ராகுல் காந்தி கட்சியிலிருந்து நீக்கப்பட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நடவடிக்க்கை எடுக்க வேண்டும். ராகுல் காந்தியின் பேச்சு இந்திய ராணுவத்தின் உற்சாகத்திற்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

பாஜக தேசியத் தலைவர் நட்டா, "ராகுல் காந்தி கருத்துக்கு நாம் எத்தகைய கண்டனம் தெரிவிக்கிறோம் என்பது முக்கியமல்ல. எல்லையில் துல்லியத் தாக்குதல் நடத்தியபோதும் ராகுல் காந்தி இதுபோன்று கேள்வி எழுப்பியிருந்தார். அவர் எப்போதுமே பாகிஸ்தானின் பார்வையில் பேசுகிறார்" என்று விமர்சித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x