Published : 17 Dec 2022 01:53 PM
Last Updated : 17 Dec 2022 01:53 PM
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் பாஜக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
பின்னணி: நியூயார்க்கில் உள்ள ஐ.நா பாதுகாப்பு அவையில் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தான் குறித்து கடுமையாக விமர்சித்தார். பயங்கரவாதி ஒசோமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு; பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாகக் கொண்டிருக்கும் நாடு என சாடினார். அந்த நாடு இந்தியா குறித்து ஐ.நா பாதுகாப்பு அவையில் குற்றம்சாட்டுவது அர்த்தமற்றது என தெரிவித்தார்.
பிலாவல் பூட்டோ சர்தாரி கூறியது என்ன? - ஜெய்சங்கரின் பேச்சை அடுத்து, நியூயார்க்கில் ஐ.நா பாதுகாப்பு அவை செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, பிரதமர் நரேந்திர மோடியை குஜராத் கலவரத்தோடு தொடர்பு படுத்தி கடுமையாக விமர்சித்தார். "ஒசாமா பின்லேடனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்ததாக நீங்கள் (ஜெய்சங்கர்) கூறுகிறீர்கள். அவர் இறந்துவிட்டார் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆனால், குஜராத்தின் கசாப்புக்கடைகாரர் இன்னமும் உயிரோடு இருக்கிறார். தற்போது அவர் இந்தியாவின் பிரதமராக இருக்கிறார். அமெரிக்காவில் நுழைய அவருக்கு (நரேந்திர மோடிக்கு) தடை விதிக்கப்பட்டது. ஹிட்லரின் பாதையில் பயணிக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் இந்தியாவின் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சரும்" என பிலாவல் பேசினார்.
நாட்டின் பல்வேறு இடங்களில் பாஜகவினர் போராட்டம்: நாடு முழுவதும் உள்ள அனைத்து தலைநகரங்களிலும் பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என பாஜக நேற்று அறிவித்தது. இதையடுத்து, நாட்டின் பல்வேறு மாநில தலைநகரங்களில் இன்று போராட்டங்கள் நடைபெற்றன. புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது, பாகிஸ்தானுக்கு எதிராகவும், பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
உத்தரப் பிரதேசத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரிலும் போராட்டம் நடைபெற்றது. பல இடங்களில் பிலாவலின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இதேபோல், மகாராஷ்ட்டிரா, குஜராத், கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.
இந்தியா கண்டனம்: முன்னதாக பிலாவல் பூட்டோ சர்தாரியின் பேச்சுக்கு வெளியுறவுத் துறை சார்பில் நேற்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது. புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, "விரக்தியின் விளிம்பில் இருந்து கொண்டு பிலாவல் பூட்டோ சர்தாரி பேசி இருக்கிறார். பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாகக் கொண்டிருக்கும் நாடு பாகிஸ்தான். ஒசாமா பின்லேடனை தியாகி என புகழ்ந்த நாடு அது. லக்வி, ஹபீஸ் சையத், மசூத் அசார், தாவூத் இப்ராஹிம் என ஐ.நாவால் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்ட 126 பேருக்கு அடைக்கலம் கொடுத்து வரும் நாடு பாகிஸ்தான்.
ஐ.நாவால் தடை விதிக்கப்பட்ட 27 பயங்கரவாத அமைப்புகளை செயல்பட அனுமதித்திருக்கும் நாடு பாகிஸ்தான். அந்த நாட்டைச் சேர்ந்த பிலாவல் பூட்டோ சர்தாரியின் நாகரிகமற்ற பேச்சு, அந்த நாட்டுக்கு மேலும் ஒரு தாழ்வு" என தனது கண்டன உரையில் அவர் குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT