Published : 17 Dec 2022 09:24 AM
Last Updated : 17 Dec 2022 09:24 AM

இது 1962ல் இருந்த நேருவின் இந்தியா இல்லை: ராகுலுக்கு பாஜக பதிலடி

ராஜ்யவர்த்தன் ரத்தோர் (இடது) ராகுல் காந்தி (வலது)

புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்க சீனா தயாராகி வருகிறது என்ற ராகுல் காந்தியின் கருத்தை புறந்தள்ளியுள்ள பாஜக இது 1962ல் இருந்த நேருவின் இந்தியா இல்லை என்று அவருக்கு பதிலடி கொடுத்துள்ளது.

முன்னதாக நேற்று, இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அதன் 100-வது நாளை முன்னிட்டு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் "இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்க சீனா தயாராகி வருகிறது. ஆனால், இதனை நமது அரசு ஏற்க மறுக்கிறது. இந்த உண்மையை அரசு மறைத்து வருகிறது" என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து மத்திய அமைச்சர் ப்ரஹலாத் ஜோஷி, "ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து காங்கிரஸ் நிதி பெற்றுள்ளது. ராகுல் காந்தி பேசுவதை எல்லாம் சட்டை செய்யத் தேவையில்லை. நேருவின் காலத்தில் நம் நிலம் சீனாவின் கைவசம் சென்றதெல்லாம் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்" என்றார்.

அதேபோல் பாஜக எம்.பி. ராஜ்யவர்த்தன் ரத்தோர் கூறுகையில், "இந்தியாவின் 37 ஆயிரம் சது கிலோ மீட்டர் நிலம் சீனாவின் வசம் சென்றபோது ராகுல் காந்தியின் தாத்தா உறங்கிக் கொண்டிருந்தார். ராஜீவ் காந்தி அறக்கட்டளை ரூ.135 கோடிநிதியை சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பெற்றுள்ளது. ராகுல் காந்தி சீனாவுக்கு ரொம்பவே நெருக்கமாகிவிட்டார். அதனால் அவருக்கு அடுத்தடுத்து என்ன நடக்கலாம் என்பது கூட தெரிகிறது" என்று பதிலடி கொடுத்துள்ளார்.

சீன அத்துமீறல்; ராஜ்நாத் விளக்கம்: சீன எல்லை பிரச்சினை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து எழுப்பப்பட்ட நிலையில், "சீன படைகள் அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டாரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே அத்துமீற முயன்றது. ஆனால் இந்தியப் படைகள் உரிய பதிலடி கொடுத்தன. இரு தரப்பிலுமே காயங்கள் ஏற்பட்டன. நம் தரப்பில் கடுமையான காயங்கள் ஏதுமில்லை. இந்தியப் படைகள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் திறம்பட இயங்குகின்றன. இனியும் இயங்கும்" என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்ற இரு அவைகளிலும் கூறியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x