Published : 17 Dec 2022 08:22 AM
Last Updated : 17 Dec 2022 08:22 AM
புதுடெல்லி: தமிழகத்திற்கும் காசிக்கும் உள்ள ஆன்மீக மற்றும் பண்பாட்டு தொடர்புகளை கொண்டாடும் வகையில் மத்திய அரசு சார்பில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக இசைஞானி இளையராஜாவின் இசைக் கச்சேரி கடந்த மாதம் 19-ம் தேதி தொடக்க விழாவில் நடைபெற்றது. இதையடுத்து மீண்டும் இளையராஜாவின் இசைச் கச்சேரி காசி விஸ்வநாதர் ஆலயத்தின் உள்ளே நேற்று முன்தினம் நடைபெற்றது. புனித கங்கைக்கு மிக அருகில் நடந்த இந்த நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் பிரதமர் நரேந்திர மோடியால் புனரமைக்கப்பட்ட இந்தக் கோயிலில் முதல் நிகழ்ச்சியாக இது இருந்தது. மேலும், காசி விஸ்வநாதர் கோயிலில் முதன்முறையாக திருவாசகம், தேவாரம், மகாகவி பாரதியாரின் பாடல்கள் ஒலித்தன. தமிழிலும் பாடல்கள் பாடி வரலாறு படைத்தார் இளையராஜா.
நேற்று முன்தினம் மாலை 7.30 மணிக்கு தொடங்கி நிகழ்ச்சிக்கு அரைமணி நேரம் முன்னதாகவே தமிழக ஆளுநர் தனது மனைவியுடன் வந்து அமர்ந்திருந்தார். நிகழ்ச்சி இறுதிவரை அமர்ந்து இளையராஜாவின் பாடல்கள் அனைத்தையும் ரசித்தார்.
நிகழ்ச்சியில் வாரணாசி ஆட்சியரான எஸ்.ராஜலிங்கம் அனைவரையும் வரவேற்றார். சிவன் பற்றி பிரபல முத்தொகுப்பு நூலை எழுதிய அமிஷ் திரிபாதியும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
காசி தமிழ்ச் சங்கமத்தில் சிறப்புரையாற்ற வந்த பேரூர் ஆதீனமான மருதாச்சல அடிகளார், டெல்லி தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா.முகுந்தன், தலைவர் கே.வி.கே.பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள், காக்னிசன்ட் ஐ.டி. நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சந்திரசேகரன், சாஸ்திரா பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.வைத்யசுப்பிரமணியம், தமிழக பாஜக சார்பில் அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆன்மீகம் மற்றும் கோயில்கள் வளர்ச்சிப்பிரிவின் தலைவர் நாச்சியப்பன், விளையாட்டு பிரிவின் தலைவர் அமர் பிரசாத், இந்து மக்கள் கட்சியின் நிறுவனரும் தலைவருமான அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட பலரும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு வந்த தமிழர்களும் இளையராஜாவின் நிகழ்ச்சியை ரசித்தனர். சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்திய மாநிலங்கள் பலவற்றில் இருந்து இளையராஜாவின் பக்தி இசையை கேட்க ரசிகர்கள் வந்திருந்தனர்.
கோயிலின் உள்ளே போடப்பட்ட 600 நாற்காலிகள் மற்றும் சோபாக்கள் அன்றி அதை சுற்றி நின்றும் சிவ பக்தர்கள் இளையராஜாவின் பக்திப் பாடல்களை ரசித்தனர். புனரமைக்கப்பட்ட கோயிலை சுற்றியுள்ள கட்டிடங்களில் பல வண்ண ஒளிவிளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இசை நிகழ்ச்சியில் இளையராஜா வழக்கம்போல் தனது பாடல்களுக்கு இடையே அவற்றை பற்றி கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.
இசைக் கச்சேரிக்கு சற்று முன்னதாக கோயில் வளாகத்தில் இளையராஜாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மனைவியுடன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது இளையராஜாவுக்கு பொன்னாடை அணிவித்து வணங்கினார்.
காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளையின் முதன்மை அதிகாரி சுனில் வர்மா, நிர்வாக உறுப்பினர் வெங்கடரமன கணபாடிகளும் குத்துவிளக்கு ஏற்றினர்.
கடந்த டிசம்பரில் பிரதமர் மோடியால் புனரமைக்கப்பட்ட இந்தக் கோயிலில் முதல் நிகழ்ச்சியாக இது இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT