Published : 17 Dec 2022 04:47 AM
Last Updated : 17 Dec 2022 04:47 AM

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்க முடியாது - பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் திட்டவட்டம்

பாட்னா: ‘‘கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்க முடியாது. குடித்தால் இறந்துவிடுவீர்கள் என்று பல முறை கூறிவிட்டோம்’’ என்று பிஹார் சட்டப்பேரவையில் முதல்வர் நிதிஷ் குமார் திட்டவட்டமாக கூறினார்.

பிஹார் மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் கள்ளச்சாராய விற்பனை பரவலாக நடப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று பாஜக உட்பட எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு பதில் அளித்து முதல்வர் நிதிஷ்குமார் பேசியதாவது: கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த விவகாரத்தில் இந்த அரசு பொறுப்பேற்காது. ஏனெனில், கள்ளச்சாராயம் குடித்தால் உயிர் போகும் என்று அரசு பல முறை விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துள்ளது. அதை பொருட்படுத்தாமல் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததற்கு நஷ்டஈடு வழங்க முடியாது. இப்போதும் சொல்கிறேன்... கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்து விடுவீர்கள். பிஹார் மாநிலத்தில் கள்ளச்சாராய புழக்கம் மிகக் குறைவாகவே உள்ளது.

எனவே, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு எந்த கருணையும் காட்ட முடியாது. பிஹார் மக்கள் யாரும் கள்ளச்சாராயம் குடிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் வைக்கிறேன். மதுவுக்கு ஆதரவாக பேசுகிறவர்களால் எந்த நன்மையும் ஏற்படாது. எனவே மது குடிக்காமல் இருப்பது நல்லது. இவ்வாறு முதல்வர் நிதிஷ் குமார் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x