Published : 16 Dec 2022 03:19 PM
Last Updated : 16 Dec 2022 03:19 PM

பிஹாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது: முதல்வர் நிதிஷ் குமார்

நிதிஷ் குமார் | கோப்புப் படம்

பாட்னா: பிஹாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

உயிரிழப்பு 50 ஆக அதிகரிப்பு: பிஹாரின் சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா என்ற பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் பிஹார் அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. அம்மாநிலத்தில் தற்போது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சியான பாஜக இது குறித்து அவையில் பல்வேறு கேள்விகளை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. பிஹாரில் மது விலக்கு அமலில் உள்ள போதிலும், அதனை நடைமுறைப்படுத்துவதில் நிதிஷ் குமார் அரசு தோல்வி அடைந்துவிட்டதாக அது குற்றம்சாட்டியுள்ளது. 50 பேர் உயிரிழந்ததற்கு அரசுதான் காரணம் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

நிதிஷ் குமார் விளக்கம்: பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து சட்டப்பேரவையில் நிதிஷ் குமார் பேசினார். அப்போது, "கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதி உதவி அளிக்காது. மது குடித்தால் இறந்துவிடுவீர்கள் என மக்களிடம் நாங்கள் கூறி வருகிறோம். மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதில் இருந்து விடுபட வேண்டும். மதுவுக்கு ஆதரவாக பேசுபவர்களால் அவர்களுக்கு எந்த நல்லதும் நடக்காது" என தெரிவித்தார்.

இதனிடையே, மது விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக மாநிலம் முழுவதும் இன்று போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதுவரை 126 பேரை கைது செய்துள்ளதாக பிஹார் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பாட்னாவில் ஊர்வலமாகச் சென்று ஆளுநரை சந்தித்த பாஜக எம்.எல்.ஏக்கள், மாநில அரசுக்கு எதிராக மனு அளித்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: இந்த விவகாரத்தில் மற்றொரு திருப்பமாக, பிஹார் கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆர்யவர்த மஹாசபா என்ற அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் பவன் பிரகாஷ் பாதக் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், "பிஹார் கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து சுதந்திரமான சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உத்தரவிட வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அளிக்க உத்தரவிட வேண்டும், கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த தேசிய அளவில் கொள்கை வகுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x