Published : 16 Dec 2022 02:17 PM
Last Updated : 16 Dec 2022 02:17 PM
குவாலியர்: மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் 4 கால்களுடன் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், கூடுதல் கால்களை அகற்றுவது குறித்து மருத்துவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
குவாலியரில் உள்ள சிகந்தர் கம்பூ என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி குஷ்வாஹா. நிறைமாத கர்ப்பிணியான இவரை, இவரது குடும்பத்தினர் குவாலியரில் உள்ள கம்லா ராஜா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு ஆர்த்திக்கு கடந்த புதன்கிழமை பெண் குழந்தை பிறந்தது. அப்போது, குழந்தை 4 கால்களுடன் இருந்ததால், உடனடியாக மருத்துவ நிபுணர்கள் இது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். ஜெய் ஆரோக்கியா மருத்துவமனையின் தலைவரும் மருத்துவருமான ஆர்.கே.எஸ்.தாகட்-டும் இந்த ஆலோசனைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் தாகட், "குழந்தை தற்போது ஆரோக்கியமாக உள்ளது. குழந்தைக்கு கூடுதலாக உள்ள 2 கால்கள் செயல்படாமல் உள்ளன. கூடுதல் உறுப்புகள் வளர்வது அரிதாக நிகழக்கூடியதுதான். எனினும், இதன் காரணமாக வேறு பாதிப்புகள் ஏதும் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேறு பாதிப்புகள் ஏதும் இல்லை என்பது உறுதினால், குழந்தைக்கு கூடுதலாக உள்ள கால்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும். அதன் பிறகு குழந்தை இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்" எனத் தெரிவித்தார்.
மருத்துவமனை தகவல்: 2.3 கிலோ கிராம் எடை கொண்ட குழந்தை தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும், குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைக்கு கூடுதலாக வளர்ந்துள்ள 2 கால்களை அகற்றுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் நிகழ்ந்த சம்பவம்: மத்தியப் பிரதேசத்தின் ராட்லம் என்ற பகுதியில் கடந்த மார்ச் மாதம் இதேபோன்று ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு இரண்டு தலைகள், மூன்று கைகள், இரண்டு கால்கள் இருந்தன. குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பிரஜேஷ் லஹோட்டி, "இது மிக மிக அரிதாக நிகழக் கூடியது. 3 கிலோ கிராம் எடை உள்ள இக்குழந்தைக்கு இரண்டு தலைகள், இரண்டு முதுகெலும்புகள் உள்ளன. இது ஒரு சிக்கலான பிரச்னை. எனவே, குழந்தை நீண்ட காலம் உயிர்வாழ வாய்ப்பில்லை" என தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT