Published : 16 Dec 2022 01:27 PM
Last Updated : 16 Dec 2022 01:27 PM

இந்திய - சீன எல்லை மோதல் விவகாரம் | மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி; அவை ஒத்திவைப்பு

அமளியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

புதுடெல்லி: இந்திய - சீன எல்லை மோதல் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள், மாநிலங்களவை துணைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டதை அடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்திய - சீன ராணுவ மோதல்: அருணாச்சலப் பிரதேச எல்லையில் உள்ள தவாங் பகுதிக்குள் கடந்த 9ம் தேதி நுழைய முயன்ற சீன துருப்புகளை இந்திய ராணுவம் விரட்டி அடித்தது. அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்திய ராணுவ வீரர்களின் தொடர் தாக்குதலை அடுத்து, சீன துருப்புகள் பின்வாங்கிச் சென்றன. இதனால், ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி: இந்த மோதல் குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் கடந்த 13ம் தேதி விளக்கம் அளித்தார். எனினும், இது குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. இந்நிலையில், இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றன. நாடாளுமன்றம் இன்று கூடியதும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிக்கை ஒன்றை வாசித்தார். எல்லையில் நிகழ்ந்த இந்திய - சீன மோதல் விவகாரம் நாட்டின் பாதுகாப்பு சார்ந்தது என்றும், இது குறித்த முழுமையைான தகவலை அறிந்து கொள்ளும் உரிமை எதிர்க்கட்சிகளுக்கு உண்டு என்றும் குறிப்பிட்டார். இது குறித்து விவாதம் நடத்துவதை அரசு ஏன் தவிர்க்கிறது என அவர் கேள்வி எழுப்பினார்.

பிரதமர் அறிக்கை சமர்ப்பிக்க கோரிக்கை: முன்னதாக, காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மாநிலங்களவையில் விதி எண் 267ன் கீழ் நோட்டீஸ் வழங்கி இருந்தார். அதில், கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு இந்திய - சீன எல்லை மோதல் குறித்து விவாதிக்க வேண்டும் என கோரி இருந்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி, அவைக்கு வந்து இது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோரி இருந்தார். எனினும், இந்த கோரிக்கையை ஹரிவன்ஷ் ஏற்கவில்லை.

எதிர்க்கட்சிகள் அமளி: இந்நிலையில், கேள்வி நேரத்தின்போது, சில ஆப்கள் மூலம் பணம் பறிக்கப்படுவது குறித்த உறுப்பினரின் கேள்விக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அப்போது, அவர் எதிர்க்கட்சிகள் குறித்து விமர்சித்தார். இதனால், கோபம் அடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவை துணைத் தலைவர் ஹர்வன்ஷ்-ன் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர் அவையை ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x