Published : 16 Dec 2022 05:37 AM
Last Updated : 16 Dec 2022 05:37 AM
புதுடெல்லி: மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டில் இளைய தலைமுறையினர் தரமான கல்வியை எளிதாக பெறுவதற்கு கடந்த 2014 முதல் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் மாற்றம் ஏற்படுவதைக் காணலாம்.
நாட்டின் மருத்துவர்கள் தேவையை நிறைவு செய்யவும் மருத்துவக் கல்விக்காக மாணவர்கள் வெளிநாடு செல்வதை தவிர்ப்பதற்கும் மோடி அரசு முயன்று வருகிறது. இதன் பலனாக நாடுமுழுவதும் எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 87% அதிகரித்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்பு, 53,000 எம்பிபிஎஸ் இடங்கள் இருந்தன, அவை தற்போது 96,000 ஆக அதிகரித்துள்ளன.
இதே காலகட்டத்தில் பட்டமேற்படிப்பு மருத்துவ இடங்கள் 31 ஆயிரத்தில் இருந்து 63 ஆயிரமாக அதிகரித்துள்ளன. இது 105 % உயர்வு ஆகும். 2014-ல் நாட்டில் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. 2022-ல் இவை 684 ஆக உயர்ந்துள்ளன. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகள் 96 சதவீதமும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் 42 சதவீதமும் உயர்ந்துள்ளன.
தற்போது நாட்டிலுள்ள 648 மருத்துவக் கல்லூரிகளில் 355 அரசுக்கும் 293 தனியாருக்கும் உரியவை ஆகும்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் 10,000 எம்பிபிஎஸ் இடங்களை உருவாக்கும் நோக்குடன், 16 மாநிலங்களில் உள்ள 58 கல்லூரிகளில் 3,877 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 72 மருத்துவக் கல்லூரிகளில் முதல் கட்டமாக 4,058 பட்ட மேற்படிப்பு இடங்களை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, மாநிலங்கள் மற்றும் அனைத்துப் பிரிவு மக்களின் பாராட்டை பெற்று வருகிறது. கரோனா பெருந்தொற்று காலத்திலும் மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன
இடைநிற்றல் குறைகிறது: கடந்த 2014 முதல் பள்ளி மாணவிகள் இடைநிற்றல் விகிதம் குறைந்து வருகிறது. பட்டமேற்படிப்புக்கான இடங்கள் கிட்டத்தட்ட 2 மடங்காக அதிகரித்துள்ளன. பள்ளி மாணவிகள் இடைநிற்றலை தடுப்பதில் கழிப்பறைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நாடு முழுவதும் 2.5 லட்சம் பள்ளிகளில் 4.5 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT