Published : 15 Dec 2022 04:14 PM
Last Updated : 15 Dec 2022 04:14 PM
புதுடெல்லி: இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை கூட்டத் தொடருக்குப் பிறகே புதிய அமைச்சரவை அமைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு தெரிவித்துள்ளார்.
இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 தொகுதிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக சுக்விந்தர் சிங் சுக்குவும், துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரியும் கடந்த 11-ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டனர். எனினும், இன்னும் அமைச்சரவை அமைக்கப்படவில்லை.
இந்நிலையில், முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு, துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி, மாநில காங்கிரஸ் தலைவர் பிரிதிபா சிங், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் டெல்லியில் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தனர். பின்னர் சுக்விந்தர் சிங் சுக்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது: "கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து வாழ்த்து பெற்றோம். அவருக்கு நாங்கள் எங்கள் நன்றியை தெரிவித்தோம். அவர் எங்களுக்கு ஒரே ஒரு மந்திரத்தை கொடுத்துள்ளார். மக்களுக்கு சேவை செய்யுங்கள் என்பதுதான் அது. அதோடு, இமாச்சலப் பிரதேச மக்களுக்கு அவர் தனது நன்றியை தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். நேரம் கிடைத்ததும் அவரை சந்திப்போம். சட்டப்பேரவை கூட்டத் தொடருக்குப் பிறகே, மாநில அமைச்சரவை அமைக்கப்படும். சட்டப்பேரவை உறுப்பினர்களில் இருந்துதான் அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். யார் யார் அமைச்சர்களாக ஆவார்கள் என்பது எனது முடிவுக்கு உட்பட்டது. அதில் எந்த மாற்றமும் இருக்காது" என தெரிவித்தார்.
அமைச்சரவை குறித்து வெளியாகி உள்ள தகவல்: உள்துறை, நிதி ஆகிய துறைகளை முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு தன் வசம் வைத்துக்கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது. துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரிக்கு நீர் சக்தி, போக்குவரத்து, மொழி, கலை, கலாச்சாரம் ஆகிய துறைகள் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் முதல்வர் உள்பட மொத்தம் 12 பேர் அமைச்சர்களாக ஆக முடியும். அந்த வகையில் இன்னும் 10 பேர் அமைச்சர்களாக வாய்ப்பு உள்ளது. இதனிடையே, தற்காலிக சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ சந்தர் குமார் நேற்று நியமிக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT