Published : 14 Dec 2022 07:12 PM
Last Updated : 14 Dec 2022 07:12 PM

தேர்தல் வெற்றிக்கு குஜராத் பாஜக சிறந்த உதாரணம்: பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற அமைப்பு ரீதியாக அது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு குஜராத் பாஜக ஒரு சிறந்த உதாரணம் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், பிரதமருமான நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாஜக உயர்மட்டக் குழு கூட்டம்: குஜராத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அக்கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டம் புதுடெல்லியில் இன்று (டிச.14) நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா உள்பட பலர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், நாட்டின் பொருளாதார நிலை குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கினார். அப்போது, உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள 7 நாடுகளில் இந்தியாவின் வளர்ச்சி தனித்துவமானதாக இருப்பதன் பின்னணி குறித்து அவர் விளக்கியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பணவீக்கமும், வேலைவாய்ப்பின்மையும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உயர்ந்து இருந்ததாகவும், பாஜக ஆட்சிக் காலத்தில் அது குறைந்து இருப்பதாகவும் புள்ளி விவரங்களுடன் அவர் விளக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், வங்கிகள் கடன் வழங்குவது மிகப் பெரிய அளவில் அதிகரித்திருப்பதாகவும், நிறுவனங்களின் வரவு - செலவு அதிகரித்திருப்பதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நரேந்திர மோடி உரை: இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற அமைப்பு ரீதியாக அது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு குஜராத் பாஜக ஒரு சிறந்த உதாரணம் என்று குறிப்பிட்டார். அவர் பேசியது குறித்து வெளியாகி உள்ள தகவல் வருமாறு: குஜராத் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாடீல்தான். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் சி.ஆர். பாடீல். மைக்ரோ மேனேஜ்மெண்ட் எனப்படும் நுண்ணிய நிர்வாகத்திற்குப் பெயர் பெற்றவர் அவர். வாக்குச் சாவடி அளவில் மட்டுமல்லாது குடும்பங்கள் அளவில் கவனம் செலுத்தக்கூடியவர் சி.ஆர். பாடீல். தனது அந்த உத்தியைத்தான் பரந்துபட்ட அளவில் பயன்படுத்தி இந்த வெற்றியை சாத்தியமாக்கி உள்ளார்.

எதிர்க்கட்சிகள் வாக்குகளைப் பிரித்தது தேர்தல் வெற்றிக்கு மிகப் பெரிய அளவில் உதவி இருக்கிறது. அதேபோல், ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடம் ஏற்படாத அளவுக்கு குஜராத் பாஜக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதன் காரணமாகவே 7வது முறையாக வெற்றி பெற முடிந்தது என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x