Published : 14 Dec 2022 07:10 AM
Last Updated : 14 Dec 2022 07:10 AM
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சியில் இருக்கும்வரை இந்தியாவின் ஓர் அங்குல நிலத்தைக்கூட யாரும் அபகரிக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: கடந்த 9-ம் தேதி அருணாச்சல பிரதேச எல்லையில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்ததை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தி பின்வாங்க செய்துள்ளனர். இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
இன்றைய (நேற்று) கேள்வி நேரத்தில், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் (எப்சிஆர்ஏ) கீழ் ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமம் ரத்துசெய்யப்பட்டது ஏன் என்று காங் கிரஸ் எம்.பி. ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2005-06 மற்றும் 2006-07நிதியாண்டுகளில் சீன தூதரகத்தில் இருந்து ரூ.1.35 கோடி நிதியுதவியை ராஜீவ் காந்தி அறக்கட்டளை பெற்றுள்ளது. இது எப்சிஆர்ஏ சட்ட விதிகளுக்கு எதிரானது. இதனால்தான் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
சமூக சேவை என்ற அடிப்படையில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த அறக்கட்டளை இந்திய, சீன உறவு குறித்து ஆய்வு செய்வதற்காக சீன தூதரகத்திடம் இருந்து நிதியுதவி பெற்றிருக்கிறது. இது சமூக சேவையா?
காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 1962-ம் ஆண்டு போரின்போது அன்றைய பிரதமர் நேரு இந்தியபகுதிகளை சீனாவுக்கு தாரைவார்த்தார். அதுகுறித்து ஆய்வுசெய்யவா நிதியுதவி பெறப்பட்டது? கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன வீரர்களை இந்தியவீரர்கள் தடுத்து நிறுத்தி விரட்டியடித்தனர். அந்த நேரத்தில் சீனதூதரக அலுவலர்களுக்கு காங்கிரஸ் விருந்து அளித்தது. இதுவும் இந்திய, சீன உறவு குறித்த ஆய்வின் ஒரு பகுதியா என்பது குறித்து அந்த கட்சி விளக்கம் அளிக்க வேண்டும்.
கடந்த 2006-ம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடியது. கடந்த 2007-ல் அப்போதைய அருணாச்சல பிரதேச காங்கிரஸ் முதல்வர் டோர்ஜி காண்டுசீனா செல்ல விசாவுக்கு விண்ணப்பித்தார்.
அவருக்கு விசா தேவையில்லை. அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று அந்த நாட்டு அரசு கூறியது.இதுவும் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ஆராய்ச்சியின் கீழ் வருகிறதா?
கடந்த 2010-ல் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு தனித் தாளில் சீன அரசு விசா வழங்கியது. இதுகுறித்தும் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ஆராய்ச்சி நடத்துகிறதா? நாட்டின் பாதுகாப்பு, எல்லை விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது.
தேடப்படும் குற்றவாளியான ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேசனிடம் இருந்து ரூ.50 லட்சத்தை ராஜீவ் காந்தி அறக்கட்டளை நன்கொடையாகப் பெற்றுள்ளது. இதுகுறித்து நாட்டு மக்களுக்கு அந்த கட்சி விளக்கம் அளிக்க வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சியில் இருக்கும்வரை இந்தியாவின் ஓர் அங்குல நிலத்தைக்கூட யாரும் அபகரிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமம் கடந்த அக்டோபரில் ரத்து செய்யப்பட்டது. இந்த அறக்கட்டளையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ப. சிதம்பரம், ராகுல் காந்தி, பிரியங்கா காந்திவதேரா உள்ளிட்டோர் அறங்காவலர்களாக உள்ளனர்.
இதேபோல ராஜீவ் காந்தி சமூகசேவை அறக்கட்டளையின் உரிமமும் ரத்து செய்யப்பட்டது. இதில் ராகுல் காந்தி, அசோக் கங்குலி, பன்சி மேத்தா, தீப் ஜோஷி ஆகியோர் அறங்காவலர்களாக உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT