Published : 13 Dec 2022 06:14 PM
Last Updated : 13 Dec 2022 06:14 PM
புதுடெல்லி: நமது படைகள் இந்திய பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ளன என்றும், ஒருமைப்பாட்டின் மீது மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சிகளையும் முறியடிக்கும் நடவடிக்கையைத் தொடரும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் பகுதிக்கு அருகே உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில், கடந்த 9-ம் தேதி சீன ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர். அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள், சீன வீரர்களை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. குறிப்பாக, சீன வீரர்கள் எல்லைக்கு அருகே சட்டவிரோதமாக வேலி அமைக்க முயன்றதால் இந்த மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நீடித்த இந்த மோதலில் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. பின்னர் இருதரப்பு வீரர்களும் அப்பகுதியிலிருந்து விலகி தங்கள் பகுதிக்கு திரும்பிவிட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த மோதல் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையின் விவரம்: “கடந்த 9-ஆம் தேதி அன்று அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பிரிவில் நமது எல்லையில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி இந்த அவையில் விவரிக்க விரும்புகிறேன். 9-ம் தேதி அன்று, சீனாவின் பிஎல்ஏ துருப்புக்கள் தவாங் பிரிவின் யாங்ட்சே பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை மீறி, தன்னிச்சையாக இருநாடுகளுக்கு இடையே நிலவும் தற்போதைய நிலையை மாற்ற முயன்றனர்.
சீன வீரர்களின் முயற்சியை நமது துருப்புக்கள் மிக உறுதியான முறையில் எதிர்கொண்டன. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் மற்றும் கைகலப்பில், பிஎல்ஏ வீரர்கள் நமது எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை இந்திய ராணுவம் துணிச்சலாகத் தடுத்தது. இதனால் அவர்கள் தங்கள் நிலைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு தரப்பிலும் சிலருக்கு காயம் ஏற்பட்டது. நமது தரப்பில் உயிரிழப்புகளோ, கடுமையான காயமோ ஏற்படவில்லை என்பதை இந்தச் சபையுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
இந்திய ராணுவத் தளபதிகளின் குறித்த நேரத்திலான தலையீடு காரணமாக, பிஎல்ஏ வீரர்கள் தங்கள் நிலைகளுக்குத் திரும்பிச் சென்றனர். சம்பவத்தின் தொடர்ச்சியாக, அப்பகுதியில் உள்ள நமது உள்ளூர் தளபதி 11-ஆம் தேதி அன்று எதிர்த்தரப்பினருடன், நிறுவப்பட்ட வழிமுறைகளுக்கு இணங்க பிரச்சினையை விவாதிக்க ஒரு கூட்டத்தை நடத்தினார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் தவிர்த்து, எல்லையில் அமைதியையும், இணக்கமான சூழலையும் நிலைநாட்ட சீனத் தரப்புக் கேட்டுக் கொள்ளப்பட்டது. தூதரக வழிமுறைகள் மூலமும் சீனத் தரப்பிடமும் இந்தப் பிரச்சினை எடுத்துச் செல்லப்பட்டது.
நமது படைகள் நமது பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ளன என்றும், அதன் மீது மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் முறியடிக்கும் நடவடிக்கையைத் தொடரும் என்றும் நான் இந்த அவையில் உறுதியளிக்க விரும்புகிறேன். நமது ராணுவ வீரர்களின் துணிச்சலான முயற்சிக்கு உறுதுணையாக இந்த முழு அவையும் ஒன்றுபட்டு நிற்கும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், அருணாச்சலப் பிரதேச பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் இருந்தும் எதிர்க்கட்சியினர் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனர். விரிவாக வாசிக்க > எல்லைப் பாதுகாப்பு குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு: இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
அமித் ஷா சொல்வது என்ன? - சீன தூதரகத்திடம் இருந்து ராஜீவ் காந்தி ஃபவுண்டேஷன் ரூ.1.35 கோடி பெற்றதாகவும், இது குறித்த கேள்விகள் எழுவதை தவிர்க்கவே காங்கிரஸ் கட்சி இந்திய - சீன எல்லையில் நிகழ்ந்த மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். விரிவாக வாசிக்க > சீன தூதரகத்திடம் இருந்து ரூ.1.35 கோடி பெற்றது ராஜீவ் காந்தி ஃபவுண்டேஷன்: அமித் ஷா குற்றச்சாட்டு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT