Published : 13 Dec 2022 04:03 PM
Last Updated : 13 Dec 2022 04:03 PM
புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேச பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் இருந்தும் எதிர்க்கட்சியினர் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் பகுதிக்கு அருகே உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் நடந்த இந்திய - சீன வீரர்கள் மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். அவர் தனது அறிக்கையை நிறைவு செய்ததும், அவைத் தலைவர் பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை மீது விவாதம் நடைபெறாது என்று அறிவித்தார்.
இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இந்திய - சீன எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் தற்போதைய நிலை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த விவாகரம் குறித்து பூஜ்ஜிய நேரத்தில் விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே அளித்த பேட்டி ஒன்றில், "எல்லை விவகாரம் குறித்து விளக்கம் பெறுவதற்கு எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அவைத் தலைவர் தெரிவித்திருந்தார். ஆனால், எங்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. எங்களின் கோரிக்கையை கேட்க அவர்கள் தயாராகவும் இல்லை. இந்தப் போக்கு நாட்டிற்கு நல்லதில்லை" என்று தெரிவித்தார்.
முன்னதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது அறிக்கையில், "கடந்த டிசம்பர் 9-ம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் சீன வீரர்கள் எல்லைக் கட்டுப்பாடு கோடு ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்ய முயன்றனர். இந்த அத்துமீறலை இந்திய வீரர்கள் திறமையாகத் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது நடந்த தாக்குதலில் இரண்டு தரப்பிலும் சில வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்த மோதலில் எந்த வீரரும் உயிரிழக்கவில்லை. பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. சீன வீரர்களின் அத்துமீறல் குறித்து அந்நாட்டு அரசாங்கத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய எல்லையைப் பாதுகாப்பதில் நமது ராணுவ வீரர்கள் தீவிரமாக இருக்கும் அதேநேரத்தில், இதுபோன்ற தாக்குதல்களை சமாளிக்கும் வகையில் எப்போதும் தயார் நிலையில் இருக்கிறார்கள் என்று அவையில் நான் உறுதியளிக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.
இந்திய - சீன வீரர்கள் மோதல்: அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் பகுதிக்கு அருகே உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில், கடந்த 9-ம் தேதி சீன ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர். அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் சீன வீரர்களை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
குறிப்பாக, சீன வீரர்கள் எல்லைக்கு அருகே சட்டவிரோதமாக வேலி அமைக்க முயன்றதால் இந்த மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 11-ம் தேதி வரை நீடித்த இந்த மோதலில் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பின்னர் இருதரப்பு வீரர்களும் அப்பகுதியிலிருந்து விலகி தங்கள் பகுதிக்கு திரும்பிவிட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT